
ஜப்பான் மருத்துவர் மற்றும் இரண்டு அமெரிக்கர்கள் உள்பட மூன்று பேருக்கு 2025-ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை குறித்த அவர்களின் கண்டுபிடிப்புக்காக இந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதனை அமெரிக்கர்களான மேரி இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானின் ஷிமோன் சகாகுச்சி ஆகிய மூன்று பேர் பகிர்ந்துகொள்கிறார்கள்.
ஆண்டுதோறும், இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை ஆற்றியவா்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவா்களுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.8.87 கோடி (10 லட்சம் டாலா்) ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன.
நிகழாண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பை நோபல் அமைப்பு இன்று வெளியிட்டுள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்று, மருத்துவத்துக்கான நோபல் பரிசுடன் அறிவிப்பு தொடங்கியிருக்கிறது. புற நோயெதிர்ப்பு சகிப்புத் தன்மைக்கான கண்டுபிடிப்புக்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பது குறித்து வெளியிட்டிருக்கும் தகவலில், நமது நோயெதிர்ப்பு அமைப்பு ஒரு பரிணாம வளர்ச்சியின் தலைசிறந்த படைப்பு. ஒவ்வொரு நாளும் அது ஆயிரக்கணக்கான வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பிற நுண்ணுயிரிகள் நம் உடலை ஆக்கிரமிக்கும் முயற்சிகளிலிருந்து பாதுகாக்கிறது. உடலில் இயங்கி வரும் நோயெதிர்ப்பு அமைப்பு இல்லாமல், நாம் உயிர்வாழவே முடியாது.
வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்க்கிருமிகளை அடையாளம் கண்டு, அவை உடலின் சொந்த செல்களிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கும் திறன் நோயெதிர்ப்பு மண்டலத்தின் அற்புதங்களில் ஒன்று.
மனிதனுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் நுண்ணுயிரிகள் ஒன்றுபோல அடையாளம் காண எந்த சீருடையும் அணிந்திருப்பதில்லை - அவை அனைத்தும் வெவ்வேறு தோற்றங்களில்தான் உள்நுழைகின்றன. சில கிருமிகள் மனித செல்களைப் போலவும் இருக்கலாம். எனவே நோயெதிர்ப்பு அமைப்பு எதைத் தாக்க வேண்டும், எதைப் பாதுகாக்க வேண்டும் என்பதை எவ்வாறு கண்காணிக்கிறது? நோயெதிர்ப்பு அமைப்பு ஏன் நம் உடல் செல்களை தாக்குவதில்லை?
இந்த கேள்விகளுக்கான பதில் ஏற்கனவே தங்களுக்குத் தெரியும் என்றுதான் மருத்துவ விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் நீண்ட காலமாக நம்பியிருந்தனர்.
உடலின் மைய நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை எனப்படும் ஒரு செயல்முறை மூலம் நோயெதிர்ப்பு செல்கள் முதிர்ச்சியடைகின்றன.
இருப்பினும், நமது நோயெதிர்ப்பு அமைப்பு இதுவரை நம்பப்பட்டதை விடவும் மிக சிக்கலானதாக இருந்திருக்கிறது. மேரி பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சகாகுச்சி ஆகியோர் புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக 2025 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.