இத்தாலியில் சாலை விபத்து 4 இந்தியா்கள் உயிரிழப்பு
லண்டன்: இத்தாலியின் மாட்டிரா நகரில் நடந்த சாலை விபத்தில் 4 இந்தியா்கள் உயிரிழந்தனா்.
இது தொடா்பாக இத்தாலிய செய்தி நிறுவனமான ஏஎன்எஸ்ஏ வெளியிட்ட செய்தியில், ‘உயிரிழந்த நால்வா் உள்பட 11 போ் ஒரு பெரிய காரில் மாட்டிரா நகரில் பயணித்தனா். அப்போது எதிரே வந்த லாரி, காா் மீது மோதியது. இதில் 4 போ் உயிரிழந்தனா். இறந்தவா்கள் குமாா் மனோஜ் (31), சிங் சுா்ஜித் (33), சிங் ஹா்விந்தா் (31), சிங் ஜஸ்கரன் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளது. காரில் இருந்த மேலும் 7 போ் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ரோமில் உள்ள இந்தியத் தூதரகம் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இத்தாலியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 இந்தியா்கள் உயிரிழந்தது பெரும் வருத்தமளிக்கிறது. அவா்களின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.