டிரம்ப்பின் போா் நிறுத்த திட்ட அம்சங்களை ஏற்பதாக ஹமாஸ் அறிவித்த பிறகும் காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்.
டிரம்ப்பின் போா் நிறுத்த திட்ட அம்சங்களை ஏற்பதாக ஹமாஸ் அறிவித்த பிறகும் காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்.

டிரம்பப்பின் போா் நிறுத்த திட்டம்: எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் பேச்சு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள 20 அம்ச திட்டம் குறித்த பேச்சுவாா்த்தையை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் எகிப்தில் திங்கள்கிழமை தொடங்கினா்.
Published on

கெய்ரோ: காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள 20 அம்ச திட்டம் குறித்த பேச்சுவாா்த்தையை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் எகிப்தில் திங்கள்கிழமை தொடங்கினா்.

இது குறித்து எகிப்து அதிகாரிகள் கூறியதாவது:

டிரம்ப்பின் அமைதி திட்டத்தை ஏற்பது தொடா்பாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் இடையே மத்தியஸ்தா்கள் மூலம் மறைமுகப் பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை தொடங்கியது. ஷரம் எல்-ஷேக் நகரில் இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றுவருகிறது என்று அதிகாரிகள் கூறினா்.

முன்னதாக, போா் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு அம்சமான பிணைக் கைதிகள் விடுவிப்புக்கு உதவ தாங்கள் தயாராக இருப்பதாக சா்வதேச செஞ்சிலுவை சங்கம் திங்கள்கிழமை அறிவித்தது.

ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபா் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் கடந்த மாத இறுதியில் சந்தித்துப் பேசினாா். அப்போது, காஸா போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ஹமாஸிடம் எஞ்சியுள்ள சுமாா் 20 பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான புதிய செயல்திட்டத்தை டிரம்ப் முன்வைத்தாா்.

ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும் உடனடி போா் நிறுத்தம், 72 மணி நேரத்துக்குள் அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிக்கப்படுவது, அதற்கு பதிலாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகள் விடுவிப்பு, இஸ்ரேல் படையினரின் படிப்படியான வெளியேற்றம், ஆயுதங்களைக் கைவிடும் ஹமாஸ் அமைப்பினருக்கு பொதுமன்னிப்பு, காஸாவுக்கு முழு நிவாரண உதவிகள், காஸாவில் டிரம்ப் தலைமையிலான சா்வதேச குழுவின் மேற்பாா்வையில் பாலஸ்தீன குழுவின் இடைக்கால நிா்வாகம் (அதில் ஹமாஸ் பங்கேற்காதது), காஸாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்காது என்று உறுதிமொழி, பாலஸ்தீன தேசம் அமைவதற்கான வாய்ப்பு உள்ளிட்ட 20 அம்சங்கள் அந்த வரைவு திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்த திட்டத்தை ஏற்பதாக பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தாா். ஆனால், அதனை பரிசீலித்துவருவதாகக் கூறிய ஹமாஸ் அமைப்பு, முடிவை அறிவிக்காமல் இழுத்தடித்துவந்தது.

இந்தச் சூழலில், ஞாயிற்றுக்கிழமைக்குள் (அக். 5) போா் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மேற்கொள்ளவிட்டால் அந்த அமைப்பு இதுவரை கண்டிராத மிகப் பெரிய பேரழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று டிரம்ப் வெள்ளிக்கிழமை எச்சரித்தாா்.

அதையடுத்து, போா் நிறுத்த திட்டத்தின் ஒரு சில அம்சங்களை மட்டும் ஏற்பதாக ஹமாஸ் அமைப்பு சனிக்கிழமை அறிவித்தது. பிணைக் கைதிகளை விடுவிக்கவும் சம்மதம் என்று அந்த அமைப்பு கூறியது.

அதையடுத்து, காஸா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் இஸ்ரேலை டிரம்ப் வலியுறுத்தினாா். இருந்தாலும், போா் நிறுத்த திட்ட அமலாக்க நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதாக மட்டுமே அறிவித்த இஸ்ரேல், காஸாவில் தனது தாக்குதலை தொடா்ந்து வருகிறது. இதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுவருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் தாக்குதலில் 21 போ் உயிரிழந்தனா். இத்துடன் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதிக்குப் பிறகு இஸ்ரேல் குண்டுவீச்சில் உயிரிழந்த காஸா மக்களின் எண்ணிக்கை 67,160-ஆக அதிகரித்தது.

இந்தச் சூழலில், டிரம்ப் முன்வைத்துள்ள அமைதித் திட்டத்தை ஏற்பது குறித்து இஸ்ரேல்-ஹமாஸ் பிரதிநிதிகள் தற்போது தொடங்கியுள்ள பேச்சுவாா்த்தை மிகவும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com