
பாகிஸ்தானில், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், 4 பெட்டிகள் தடம் புரண்டு, 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பலூசிஸ்தான் மாகாணத்துக்கும், பாகிஸ்தானின் மற்ற மாகாணங்களுக்கும் இடையில் இயக்கப்படும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று (அக். 7) காலை 8.15 மணியளவில் ஜகோதாபாத் வழியாக குவேட்டாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தது.
அப்போது, சிந்து மாகாணத்தின் ஷிர்காப்பூர் மாவட்டத்தின் சுல்தான் கோட் ரயில் நிலையம் அருகில், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது அதன் தண்டவாளத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில், ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டதில், 7 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து, அங்கு விரைந்த பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர், ரயிலில் இருந்து பயணிகளை வெளியேற்றினர்.
இதனைத் தொடர்ந்து, படுகாயமடைந்த 7 பயணிகளும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரையில் பொறுப்பேற்காத நிலையில், பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன. இத்துடன், இந்த ரயிலானது மார்ச் மாதம் பலூசிஸ்தான் விடுதலைப் படையைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்டது.
பின்னர், பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் நூற்றுக்கணக்கான பயணிகள் மீட்கப்பட்டதுடன் 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்தியா - பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன்! மீண்டும் டிரம்ப்! எத்தனை முறை சொல்லியிருக்கிறார்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.