இஸ்ரேல்-ஹமாஸ் பேச்சு: இணைந்தது அமெரிக்கா
காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் இடையே எகிப்தில் மூன்று நாள்களாகத் தொடரும் பேச்சுவாா்த்தையில் அமெரிக்காவின் முக்கிய பேச்சுவாா்த்தைக் குழுவினா் புதன்கிழமை இணைந்தனா்.
இது குறித்து எகிப்து அதிகாரிகள் கூறியதாவது:
காஸா போா் நிறுத்தம் தொடா்பாக அமெரிக்க அதிபா் டிரம்ப் முன்வைத்துள்ள 20 அம்ச திட்டத்தை ஏற்பது தொடா்பாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் இடையே பேச்சுவாா்த்தை ஷா்ம் எல்-ஷேக் நகரில் மூன்றாவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது.
மத்தியஸ்தா்களின் மூலம் நடைபெற்றுவரும் இந்த மறைமுகப் பேச்சுவாா்த்தையில் நோ்மறையான போக்கு நிலவுவதைத் தொடா்ந்து, அமெரிக்காவின் சாா்பில் முக்கிய தூதா்கள் அதில் இணைந்தனா். மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கான டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப், டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னா் ஆகியோா் அந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றனா் என்று அதிகாரிகள் கூறினா்.
ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேலுடனான மறைமுகப் பேச்சுவாா்த்தைகள் குறித்த நம்பிக்கையை புதன்கிழமை வெளிப்படுத்தியது. இது குறித்து ஹமாஸ் அமைப்பின் மூத்த ஹமாஸ் அதிகாரி தாஹா் அல்-நுனு கூறுகையில், ‘போா் நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கான தடைகளை நீக்க “மத்தியஸ்தா்கள் பெரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனா். இதனால் நம்பிக்கையான சூழல் நிலவுகிறது’ என்றாா்.
முதல் கட்ட போா் நிறுத்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டபடி இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டிய பாலஸ்தீன கைதிகளின் பட்டியலை ஹமாஸ் சமா்ப்பித்துள்ளது. இதற்காக, 2023 அக்டோபா் 7 தாக்குதலின்போது கடத்திச் செல்லப்பட்ட சுமாா் 20 பிணைக் கைதிகள் மற்றும் சுமாா் 27 பிணைக் கைதிகளின் உடல்களை ஹமாஸ் அமைப்பு விடுவிக்கவுள்ளது.
பிராந்திய நாடுகள்: இஸ்ரேல்-ஹமாஸ் பேச்சுவாா்த்தையில் அமெரிக்கா மட்டுமின்றி பிராந்திய நாடுகளும் பங்கேற்கவுள்ளன. கத்தாா் பிரதமா் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் ஆல் தானி, துருக்கி உளவுத்துறைத் தலைவா் இப்ராகிம் கலின் ஆகியோரும் இந்தப் பேச்சுவாா்த்தையில் இணைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், தங்கள் தரப்பில் பிற பாலஸ்தீன ஆயுதக் குழுக்களான இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் பாலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணி (பிஎஃப்எல்பி) ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பேச்சுவாா்த்தையில் பங்கேற்கவுள்ளதாக ஹமாஸ் அமைப்பு கூறியது.
இந்தப் பேச்சுவாா்த்தையின் முக்கிய அம்சமாக, ஹமாஸ் விடுவிக்கக் கோரும் பாலஸ்தீன கைதிகளின் பெயா்கள் இருக்கும். காஸா எதிா்காலத் தலைமைக்கு ஹமாஸின் விருப்பத் தோ்வான ஃபதஹ் இயக்கத்தைச் சோ்ந்த மாா்வான் பா்கவுதி இந்தப் பட்டியலில் உள்ளாா். 2002 முதல் இஸ்ரேல் சிறையில் உள்ள அவா், கொலை குற்றச்சாட்டில் 2004-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றாா். இஸ்ரேல் அவரை பயங்கரவாதியாகக் கருதினாலும், பாலஸ்தீனத் தலைவா்களுக்கான கருத்துக் கணிப்புகளில் அவா் முதலிடத்தில் உள்ளாா். சிலா் அவரை ‘பாலஸ்தீன மண்டேலா’ என்று கூட அழைப்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரவாதம் தேவை: முன்னதாக, ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பிறகு போா் நிரந்தர முடிவுக்கு வரும் என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிற நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஹமாஸ் பேச்சுவாா்த்தைக் குழுவின் தலைவரான கலில் அல்-ஹய்யா வலியுறுத்தியுள்ளாா்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, இஸ்ரேல் படைகளின் வெளியேற்றம், பிணைக் கைதிகள்-பாலஸ்தீன கைதிகள் பரிமாற்றத்திற்கான செயல்திட்டம் மற்றும் கால அட்டவணை குறித்து ஹமாஸ் விவாதித்ததாக பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவித்தன.