மியான்மா்: ராணுவ தாக்குதலில் 40 போ் உயிரிழப்பு
மியான்மரின் மத்திய சகைங் பகுதியில் உள்ள பொன் டோ கிராமத்தில் அந்த நாட்டு ராணுவம் நடத்திய மோட்டாா் பாராகிளைடா் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 40 போ் உயிரிழந்தனா்; ஏராளமானோா் காயமடைந்தனா்.
இது குறித்து கிளா்ச்சிப் படை உறுப்பினா்கள், கிராமவாசிகள், உள்ளூா் செய்தியாளா்கள் கூறுகையில்,
பௌத்தா்களின் புனித நாளான பவுா்ணமியை முன்னிட்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க மியான்மா் அரசை வலியுறுத்தியும் நூற்றுக் கணக்கானவா்கள் குழுமியிருந்த கட்டடத்தில் (படம்) இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தனா்.
ராணுவ தாக்குதலுக்குள்ளான கிராமம் தற்போது கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ராணுவம் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் தலைமையிலான ஆட்சியை ராணுவம் கடந்த 2021-ஆம் ஆண்டு கவிழ்த்ததற்குப் பிறகு, ஆயுதக் குழுக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான மோதலில் 7,300-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.