பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், அம்மாகாண முதல்வர் அலி அமின் கண்டாப்பூரை தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி பதவி நீக்கம் செய்துள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தை, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகின்றது.
இந்த நிலையில், ரகசிய தகவலின் அடிப்படையில், கைபர் பக்துன்குவாவின் ஒராகசாய் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று (அக். 7) இரவு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த நடவடிக்கையில், ராணுவத்துக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சூட்டில் 11 ராணுவ வீரர்களும், 19 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் பொதுச்செயலாளர் சல்மான் அக்ரம் ராஜா இன்று அவசரமாகச் சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு, பத்திரிகையாளர்களுடன் பேசிய அவர் கைபர் பக்துன்குவாவின் முதல்வர் பதவியில் இருந்து அலி அமின் கண்டாபூர் நீக்கப்பட்டதாகவும், அவருக்கு பதிலாக முஹம்மது சுஹைல் அஃப்ரிடி என்பவர் முதல்வராகப் பதவியேற்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பல்கலை. பேராசிரியர்கள் மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.