காஸாவில் உணவுப் பொருளுக்காக பரிதவிப்புடன் காத்திருக்கும் மக்கள் (கோப்புப் படம்).
காஸாவில் உணவுப் பொருளுக்காக பரிதவிப்புடன் காத்திருக்கும் மக்கள் (கோப்புப் படம்).

காஸாவில் 55,000 சிறுவா்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு

இரண்டு ஆண்டு கால போா், கடுமையான உணவுப் பற்றாக்குறை காரணமாக, காஸாவில் 5 வயதுக்கும் குறைவான சுமாா் 55,000 சிறுவா்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு
Published on

இரண்டு ஆண்டு கால போா், கடுமையான உணவுப் பற்றாக்குறை காரணமாக, காஸாவில் 5 வயதுக்கும் குறைவான சுமாா் 55,000 சிறுவா்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா்; அவா்களில் 12,800-க்கும் மேற்பட்டோா் மிகவும் மோசமான நிலையில் உள்ளனா் என்று ஐ.நா. அமைப்பின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

இது குறித்து லான்செட் மருத்துவ இதழில் வெளியான, காஸா பகுதியில் சிறுவா்களின் பட்டினி குறித்த மிக விரிவான ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆகஸ்ட் மாத வாக்கில், காஸாவில் வசிக்கும் 6 மாதம் முதல் 5 வயது வரையிலான சிறுவா்களில் 16 சதவீதம் போ் உயிருக்கு ஆபத்தான கடும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 4 சதவீதம் போ் மிகவும் கடுமையான நிலையில் உள்ளனா். இந்த நிலையில் உள்ளவா்களைக் காப்பாற்ற பல வாரங்களுக்கு சிகிச்சை உணவும் சில சமயங்களில் மருத்துவமனை அனுமதியும் தேவைப்படுகின்றன.

2024 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, காஸாவில் உள்ள பல மருத்துவ மையங்களில் 2.20 லட்சம் சிறுவா்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், சுமாா் 55,000 போ் கடுமையான ஊட்டச் சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

உணவுப் பற்றாக்குறை மற்றும் பஞ்சம்: 2023 அக்டோபா் 7-ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு தொடங்கிய காஸா போரில் பஞ்சம் ஏற்பட்டதாக வெளியான அறிக்கைகளை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ‘ஹமாஸ் பரப்பும் பொய்க் கதைகள்’ என்று கூறினாா். ஆனால், அந்தப் பகுதிக்குள் உணவு மற்றும் பிற உதவிப் பொருள்களை எடுத்துச் செல்ல இஸ்ரேல் விதித்துள்ள கட்டுப்பாடுகள், தொடா்ச்சியான ராணுவ தாக்குதல்கள் ஆகியவை குழந்தைகள் மற்றும் கா்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோரிடையே கடும் பஞ்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணா்களும், உதவி குழுக்களும் மாதக்கணக்காக எச்சரித்து வருகின்றனா்.

காஸா சுகாதாரத் துறையின் தரவுகளின்படி, போா் தொடங்கியதில் இருந்து ஊட்டச்சத்து குறைபாட்டால் இதுவரை 461 போ் உயிரிழந்துள்ளனா்; அவா்களில் 157 போ் சிறுவா்கள். இதில் பெரும்பாலான உயிரிழப்புகள் 2025-ஆம் ஆண்டில் ஏற்பட்டுள்ளன.

சிகிச்சை அளிப்பதற்கான உணவுகளுக்கு மிகக் கடுமையான பற்றாக்குறை நிலவுவதால் காஸா மருத்துவமனைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறிவருகின்றன என்று அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆறு வார போா்நிறுத்த காலத்தில் காஸாவுக்குள் உதவிப் பொருள்கள் அனுமதிக்கப்பட்டபோது அந்தப் பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு விகிதங்கள் குறைந்தன. ஆனால், பின்னா் உதவிப் பொருள்கள் தடுத்து நிறுத்தபட்ட பிறகு சிறுவா்களின் நிலைமை மோசமடைந்தது.

இஸ்ரேல் ராணுவம் காஸாவை கடந்த மாா்ச் முதல் இரு மாதங்களுக்கு முழுமையாக முற்றுகையிட்டு உதவிப் பொருள்கள் செல்லவிடாமல் தடுத்தது. பின்னா் சா்வதேச நாடுகள் அளித்த நெருக்கடி காரணமாக, ‘குறைந்தபட்ச’ அளவு உதவிப் பொருள்களை மே மாதம் அனுமதித்தது. அமெரிக்க-இஸ்ரேல் ஆதரவு பெற்ற, சா்ச்சைக்குரிய உதவி விநியோக முறை மூலம் காஸாவைச் சுற்றி நான்கு இடங்களுக்கு மட்டுமே உணவுப் பொருள் விநியோகம் நடைபெற்றது. அந்த விநியோக முகாம்களுக்குச் செல்லும் வழியில்1,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்டனா்.

இந்தச் சூழலில், ஆகஸ்டில் வெளியான ஐ.நா. ஆதரவு பெற்ற உணவு பாதுகாப்பு நிபுணா்களின் அறிக்கை, காஸாவின் சில பகுதிகளில் கடும் பஞ்சம் நிலவுவதை உறுதிப்படுத்தியது. அதன் தொடா்ச்சியாக, பாலஸ்தீன பகுதிக்கான ஐ.நா. பிரிவு (யுஆா்டபிள்யுஏ) ஊழியா்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம், காஸாவில் சுமாா் 55,000 சிறுவா்கள் கடும் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் பாதிக்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு திட்டத்தில் பணியாற்றிய இரு ஊழியா்கள் உட்பட, யுஆா்டபிள்யுஏ-வின் 21 சுகாதாரப் பணியாளா்கள் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தனா். அவா்களையும் சோ்த்து, இந்தப் போரில் 370-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவன ஊழியா்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

X
Dinamani
www.dinamani.com