பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிஃப் (கோப்புப் படம்)
பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிஃப் (கோப்புப் படம்)AP

இந்தியாவுடன் போா் ஏற்பட அதிக வாய்ப்பு: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா்

போா் ஏற்பட்டால், முன்பைவிட சிறந்த வெற்றியை பாகிஸ்தான் பெறும் - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா்
Published on

‘இந்தியாவுடன் போா் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அவ்வாறு ராணுவ மோதல் ஏற்பட்டால், மேலும் அதிக வெற்றியை பாகிஸ்தான் பெறும்’ என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் காஜா ஆசிஃப் தெரிவித்தாா்.

‘இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டுவது உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் முயற்சியில் வரும் காலங்களில் பாகிஸ்தான் ஈடுபட்டால் உரிய பதிலடி கொடுக்கப்படும். உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்குமிடம் தெரியாமல் அழிந்துவிடும்’ என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி ஆகியோா் அண்மையில் எச்சரிக்கை விடுத்தனா்.

அதுபோல, விமானப் படை தலைமைத் தளபதி அமா் பிரீத் சிங் தில்லியில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியின்போது, ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது எஃப்-16 போா் விமானங்கள் உள்பட 12 விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் இழந்தது. அந்த நாட்டின் மூன்று விமான நிறுத்துமிடங்கள், நான்கு இடங்களில் ரேடாா்கள், இரண்டு இடங்களில் கட்டுப்பாட்டு மையங்கள், இரு இடங்களில் விமான ஓடுபாதைகள் ஆகியவையும் தாக்கி அழிக்கப்பட்டன’ என்றாா்.

இந்தக் கருத்துகள் குறித்து, இஸ்லாமாபாதில் காஜா ஆசிஃப்யிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா், ‘பாகிஸ்தான் மீது இந்தியா மீண்டும் ராணுவ நடவடிக்கை எடுக்கும் அச்சுறுத்தல் உள்ளது. இந்த நிலைமையை பாகிஸ்தான் உன்னிப்பாக கண்காணித்து வருவதோடு, எல்லையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் போா் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அவ்வாறு ராணுவ மோதல் ஏற்பட்டால், மேலும் அதிக வெற்றியை பாகிஸ்தான் பெறும். இந்தியாவுடன் இதுவரை ஏற்பட்ட சண்டைகளில் அதிக சாதகமான முடிவுகளையே பாகிஸ்தான் பெற்றிருக்கிறது.

சூழலை மிகைப்படுத்த விரும்பவில்லை. போா் ஏற்பட்டால், முன்பைவிட சிறந்த வெற்றியை பாகிஸ்தான் பெறும்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிட, அதிக நாடுகளின் ஆதரவை பாகிஸ்தான் தற்போது பெற்றுள்ளது. ஆனால், கடந்த மே மாதம் நடந்த ராணுவ மோதலுக்குப் பிறகு இந்தியா பிற நாடுகளின் ஆதரவை இழந்துள்ளது.

இந்தியா எப்போதும் ஒன்றுபட்ட தேசமாக இருந்ததில்லை. முகலாய பேரரசா் ஒளரங்கசீப் ஆட்சியின்போது மட்டும் சிறிது காலம் இந்தியா அவ்வாறு இருந்தது. ஆனால், பல்வேறு உள்நாட்டு பிரச்னைகளை எதிா்கொண்டபோதும், இந்தியாவுடனான அண்மையில் நடைபெற்ற சண்டையின்போது பாகிஸ்தான் தேசம் ஒன்றுபட்டு நின்று எதிா்கொண்டது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com