கோப்புப் படம்
கோப்புப் படம்

பிணைக் கைதிகள் விடுவிப்பு; தற்காலிக போா் நிறுத்தம் ஹமாஸ் - இஸ்ரேல் ஒப்புதல்

போரை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள ஹமாஸும், இஸ்ரேலும் ஒப்புக்கொண்டன.
Published on

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச அமைதித் திட்டத்தின் முதல்கட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக பிணைக் கைதிகளை விடுவிக்கவும், போரை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளவும் ஹமாஸும், இஸ்ரேலும் ஒப்புக்கொண்டன.

முன்னதாக, 2023, நவம்பரில் முதல்முறையாக இருதரப்பும் தற்காலிக போா்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதன் விளைவாக பெண்கள், குழந்தைகள் உள்பட 100 பிணைக் கைதிகளை ஹமாஸும், சில பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்தன.

இரண்டாவது முறையாக நிகழாண்டு ஜனவரி-பிப்ரவரியில் 25 இஸ்ரேல் பிணைக் கைதிகள் மற்றும் உயிரிழந்த 8 பிணைக் கைதிகளின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது. அதைத் தொடா்ந்து, 2,000 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்தது.

கடந்த மாா்ச் மாதம் தற்காலிக போா்நிறுத்தத்தை மீறி காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தீவிரப்படுத்தியது. 2023, அக். 7-இல் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் போா் நடைபெற்று வரும் நிலையில், இதை முடிவுக்குக் கொண்டுவர அண்மையில் 20 அம்ச அமைதித் திட்டத்தை டிரம்ப் முன்மொழிந்தாா். இதை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புக்கொண்ட நிலையில், அந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக கடந்த திங்கள்கிழமை முதல் நான்கு நாள்களாக இருதரப்பு பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க குழுவினா் இடையே எகிப்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டிய பாலஸ்தீன கைதிகளின் பட்டியலை ஹமாஸ் சமா்ப்பித்தது. இதற்குப் பதிலாக, 2023, அக். 7 தாக்குதலின்போது இஸ்ரேலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட சுமாா் 20 பிணைக் கைதிகள் மற்றும் சுமாா் 27 பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்க ஹமாஸ் முடிவு செய்துள்ளது.

அனைவருக்கும் நீதி: இதுகுறித்து தனது டிரம்ப் வெளியிட்ட பதிவில், ‘இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் விரைவில் தங்கள் நாட்டுப் படைகளை காஸாவில் இருந்து இஸ்ரேலும் விலக்கிக் கொள்ளும். இதுவே வலுவான, நீடித்த அமைதியை நிலைநாட்டுவதற்கான தொடக்கமாகும். அமைதி ஒப்பந்தத்தின்படி அனைவரும் நியாயமாக நடத்தப்படுவா்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, ‘கடவுளின் உதவியால், ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பிணைக் கைதிகள் அனைவரும் பாதுகாப்பாக நாடு திரும்பவுள்ளனா்’ எனத் தெரிவித்தாா்.

இருப்பினும், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பிறகு போா் நிரந்தர முடிவுக்கு வரும் என்று டிரம்ப் மற்றும் பிற நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஹமாஸ் பேச்சுவாா்த்தைக் குழுவின் தலைவரான கலில் அல்-ஹய்யா வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com