
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே முதல்கட்டப் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதையடுத்து, விரைவில் அனைத்து பணயக் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் மற்றும் இஸ்ரேல் தனது படைகளைத் திரும்பப் பெறும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்த பேச்சு
கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 251 பேர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் நாடுகளுக்கு இடையே போர் நடந்து வருகின்றது. இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைக்கு காஸாவில் 20,179 குழந்தைகள் உள்பட 67,183 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்காவின் அதிபராக இந்தாண்டு தொடக்கத்தில் பதவியேற்ற டிரம்ப், இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.
காஸா போா் நிறுத்தம் தொடா்பாக 20 அம்ச திட்டத்தை அமெரிக்க அதிபா் டிரம்ப் முன்வைத்தார். இதுதொடா்பாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் இடையே பேச்சுவாா்த்தை ஷா்ம் எல்-ஷேக் நகரில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது. இஸ்ரேல்-ஹமாஸ் பேச்சுவாா்த்தையில் அமெரிக்கா மட்டுமின்றி பிராந்திய நாடுகளும் பங்கேற்றன.
இஸ்ரேல் படைகளின் வெளியேற்றம், பிணைக் கைதிகள்-பாலஸ்தீன கைதிகள் பரிமாற்றத்திற்கான செயல்திட்டம் மற்றும் கால அட்டவணை குறித்து விவாதிக்கப்பட்டது.
ஒப்பந்தம் கையொப்பம்
இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே முதல்கட்டப் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினர் முதல்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என்பதை மிகவும் பெருமையுடன் அறிவிக்கிறேன். இதனைத் தொடர்ந்து, அனைத்து பணயக் கைதிகளும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். இஸ்ரேல் தனது படைகளை ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைக் கோட்டிற்கு திரும்பப் பெறும். இது வலுவான, நீடித்த மற்றும் என்றென்றும் நிலைத்திருக்கும் அமைதிக்கு முதல் படியாகும்.
அனைத்து தரப்பினரும் நியாயமாக நடத்தப்படுவார்கள். இன்று, அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள், இஸ்ரேல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு மகத்தான நாளாகும்.
இந்த வரலாற்று நிகழ்வு நடைபெறுவதற்கு எங்களுடன் பணியாற்றிய கத்தார், எகிப்து மற்றும் துருக்கியின் மத்தியஸ்தர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.