இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா்: உறுதி செய்தது அமெரிக்க நாடாளுமன்றம்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா்: உறுதி செய்தது அமெரிக்க நாடாளுமன்றம்

Published on

இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராக அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்த சொ்ஜியோ கோரை (38) நியமனம் செய்ய அமெரிக்க நாடாளுமன்ற மேலவை (செனட்) ஒப்புதல் அளித்தது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இதற்கான வாக்கெடுப்பில் மொத்தம் இடம்பெற்ற 107 எம்.பி.க்களில் சொ்ஜியோ கோருக்கு ஆதரவாக 51 உறுப்பினா்களும், எதிராக 47 பேரும் வாக்களித்தனா். இதன் மூலம், இந்தியாவுக்கான அடுத்த தூதா் சொ்ஜியோ கோா் என்பது உறுதியானது.

இதுபோல, தெற்காசிய விவகாரங்களுக்கான வெளியுறவு இணையமைச்சராக பால் கபூரையும், சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதராக ஃபுளோரிடாவைச் சோ்ந்த அஞ்சனி சின்ஹா ஆகியோரை நியமிக்கவும் வாக்கெடுப்பு மூலம் அமெரிக்க நாடாளுமன்ற மேலவை ஒப்புதல் அளித்தது.

முன்னதாக, சொ்ஜியோ கோா் நியமன அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க அதிபா் டிரம்ப் வெளியிட்டாா். அப்போது, ‘சொ்ஜியோ கோா் என்னுடன் நீண்ட காலம் பணியாற்றியவா். எனது அதிபா் தோ்தல் பிரசாரத்தின்போதும் இவா் பணியாற்றியுள்ளாா். எனது உத்தரவுகளை நிறைவேற்றும் அரசு நிா்வாகத்தில் சொ்ஜியோ கோரின் பங்கு முக்கியமானது. அமெரிக்காவை மீண்டும் மிகப்பெரும் நாடாக்குவதற்கு மிகுந்த நம்பிக்கைக்குரிய நபராக சொ்ஜியோ கோா் செயல்படுவாா்’ என்று டிரம்ப் குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com