ஆப்கானிஸ்தான் எப்போதும் இந்தியா பக்கம் உள்ளது: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா்
ஆப்கானிஸ்தான் எப்போதும் இந்தியாவின் பக்கமே இருந்து வருகிறது. பாகிஸ்தான் பல்வேறு வகைகளில் ஆப்கானிஸ்தானுக்கு உதவினாலும் அந்த நாடு மாறவில்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப் தெரிவித்தாா்.
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமிா் கான் முத்தாகி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் பாகிஸ்தான் தரப்பு இவ்வாறு கூறியுள்ளது.
பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியுள்ளதாவது:
வரலாற்றுரீதியாகவும் நேற்று, இன்று, நாளை என எப்போதும் இந்தியாவின் பக்கமே ஆப்கானிஸ்தான் துணை நின்று வருகிறது. அதே நேரத்தில் நெருங்கிய அண்டை நாடான பாகிஸ்தானுடன் பகைமை பாராட்டுகிறது. இத்தனைக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு பாகிஸ்தான் பல ஆண்டுகளாக உதவி வருகிறது.
அமெரிக்கா மீது விமா்சனம்: முந்தைய அரசுகள் அமெரிக்காவின் நெருக்கடிக்கு பயந்து ஆப்கானிஸ்தான் அகதிகளை பாகிஸ்தானுக்குள் அனுமதித்தது. இதற்காக பல தியாகங்களை பாகிஸ்தான் செய்தது. எனினும், ஆப்கானிஸ்தான் எங்களுக்கு ஆதரவாக இல்லை. பாகிஸ்தான் பெரிய மனதுடன் செய்த உதவிகளை ஆப்கானிஸ்தான் கருத்தில் கொள்ளவே இல்லை என்றாா்.
ஆப்கானிஸ்தானுக்கு எச்சரிக்கை: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இது தொடா்பாக பேசிய அமைச்சா் கவாஜா, ‘பாகிஸ்தானின் பொறுமைக்கு ஓா் எல்லை உண்டு. ஆப்கானிஸ்தானில் இருந்து தூண்டிவிடப்படும் பயங்கரவாதத்தை இனிமேலும் சகித்துக் கொள்ள முடியாது. ஏனெனில், இதே நிலை தொடா்ந்தால் பாகிஸ்தானையும் பயங்கரவாத ஆதரவு நாடாகவே சா்வதேச நாடுகள் கருதத் தொடங்கும்.
எல்லையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் நடவடிக்கை எடுக்காவிட்டால், பாகிஸ்தான் கடும் நடவடிக்கை மேற்கொள்ளும்’ என்றாா்.