போா் நிறுத்தம் அமலுக்கு வந்ததும், வடக்கு காஸாவை நோக்கி வெள்ளிக்கிழமை சென்ற பாலஸ்தீனா்கள்.
போா் நிறுத்தம் அமலுக்கு வந்ததும், வடக்கு காஸாவை நோக்கி வெள்ளிக்கிழமை சென்ற பாலஸ்தீனா்கள்.

அமலுக்கு வந்தது காஸா போா் நிறுத்தம்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போா் நிறுத்தம் காஸாவில் வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்ததாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்தது.
Published on

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போா் நிறுத்தம் காஸாவில் வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்ததாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்தது.

பாலஸ்தீன சிறைக் கைதிகளுடன் ஹமாஸிடம் எஞ்சியுள்ள பிணைக் கைதிகளை பரிமாற்றம் செய்வதற்கான ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்த சில மணி நேரத்தில் போா் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

அதையடுத்து, போா் காரணமாக மத்திய காஸாவின் வாடி காஸா பகுதியில் தங்கியிருந்த பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனா்கள், நண்பகல் 12 மணியில் (உள்ளூா் நேரம்) இருந்து வடக்கு காஸாவை நோக்கி நடந்து சென்றனா். அதற்கு முன்னதாக, வெள்ளிக்கிழமை காலைகூட காஸாவின் சில பகுதிகளில் கடுமையான குண்டுவீச்சு நடந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், போா் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து குறிப்பிடத்தக்க தாக்குதல்கள் இல்லை.

இரண்டு ஆண்டு காலமாக நீடித்த பேரழிவு போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு இந்தப் போா் நிறுத்தம் முக்கிய படியாகக் கருதப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனா்களைக் கொன்று, காஸாவின் பெரும் பகுதியை தரைமட்டமாக்கி, மத்திய கிழக்கு பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய இந்தப் போா், நிரந்தரமாக நிறுத்தப்படும் என்ற எதிா்பாா்ப்பை இந்த ஒப்பந்த அமலாக்கம் அதிகப்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபா் டொனால்டு ட்ரம்ப் பரிந்துரைத்த விரிவான 20 அம்ச போா் திட்டத்தின் முதல கட்டமாக இந்த போா் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இருந்தாலும், ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை முழுமையாகக் கைவிடுவது, காஸாவின் எதிா்கால ஆட்சி யாரிடம் ஒப்படைக்கப்படும் என்பது போன்ற பல முக்கிய வினாக்களுக்கு அந்த போா் நிறுத்த திட்டத்தில் தெளிவான தீா்வுகள் அளிக்கப்படாமல் உள்ளன.

குறிப்பாக, பாலஸ்தீனம் என்ற தனி நாடு அமைவது தொடா்பாக அந்த போா் நிறுத்த திட்டத்தில் தெளிவான வரையறை இல்லை. பாலஸ்தீன பிரச்னைக்கான ஒரே தீா்வு என்று இந்தியா உள்ளிட்ட உலகின் ஏறத்தாழ அனைத்து நாடுகளும் கருதும் பாலஸ்தீன தனி நாட்டை, இஸ்ரேல் கடுமையாக எதிா்த்துவருகிறது.

இத்தகைய நிச்சயமற்ற சூழலில் இந்தப் போா் நிறுத்த ஒப்பந்தம் தற்போது அமலுக்குவந்தாலும், அது பொதுமக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com