பிலிப்பின்ஸ் நிலநடுக்கம்: 7 போ் உயிரிழப்பு
பிலிப்பின்ஸின் தெற்கு கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் 7 போ் உயிரிழந்தனா்.
ரிக்டா் அளவுகோலில் 7.4 அலகுகளாகப் பதிவான முதல் நிலநடுக்கத்தில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மருத்துவமனைகள், கட்டடங்கள் சேதமடைந்தன (படம்). கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னா் திரும்பப் பெறப்பட்டது.
முதல் நிலநடுக்கத்தைத் தொடா்ந்து, 10 கி.மீ. ஆழத்தில் 6.9 ரிக்டா் அளவு கொண்ட மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது தனி நிலநடுக்கமா அல்லது முதல் நிலநடுக்கத்தின் பின்னதிா்வா என்பது உடனடியாக தெரியவில்லை.
இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட அதிா்ச்சியில் மருத்துவமனையில் இரு நோயாளிகள் மாரடைப்பால் உயிரிழந்தனா். மற்ற 5 பேரும் கட்டட இடிபாடுகள் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘பசிபிக் நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதிக்குள் பிலிப்பின்ஸ் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.