
அமைதியைவிட அரசியலுக்கு முக்கியத்துவமா? என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு அக்குழுவினரிடம் வெள்ளை மாளிகை கேள்வி எழுப்பியுள்ளது.
தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காக போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு, நிகழாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என நோபல் பரிசு தெரிவுக் குழு அறிவித்துள்ளது. இவர் தி டைம்ஸ் இதழின் 2025 ஆம் ஆண்டில் பிரபலமிக்க முதல் 100 பேரிலும் இடம்பெற்றுள்ளார்.
உலகளவில் நடைபெற்றுவந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் உள்பட(பல முறை டிரம்ப் கூறியிருக்கிறார்) 8-க்கும் மேற்பட்ட போர்களைத் தடுத்து நிறுத்தியதாக தொடர்ந்து தம்பட்டம் அடித்துவந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், வேறு ஒருவருக்கு பரிசு வழங்கப்பட்டதால் அவர் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதிபர் டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்ட விவகாரத்தில் மரியாவையும், நோபல் தெரிவு குழுவினரையும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நோபல் பரிசு குழுவின் பதிவை மறுப்பதிவிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “அதிபர் டிரம்ப் தொடர்ந்து பல போர்களை முடிவுக்கு கொண்டுவருவார், அமைதி ஒப்பந்தங்களை மேற்கொள்வார், உயிர்களைக் காப்பாற்றுவார்.
அவர் மனிதாபிமானமிக்கவர், அவரின் முழு சக்தியால் மலைகளைக்கூட நகர்த்தும் வல்லமை மிக்கவர், அவரைப் போல யாரும் இருக்க மாட்டார்கள். நோபல் குழுவினர் அமைதியைவிட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதை நிரூபித்துவிட்டனர்” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.