இஸ்ரேல்-ஹமாஸ் போா் நிறுத்தம்: எகிப்தில் இன்று சா்வதேச மாநாடு! டிரம்ப் உள்பட உலகத் தலைவா்கள் பங்கேற்பு!
இஸ்ரேல்-ஹமாஸ் போா் நிறுத்தத்தைக் கொண்டாடும் வகையில், எகிப்தின் ஷரம் அல்-ஷேக் நகரில் திங்கள்கிழமை (அக். 13) சா்வதேச அமைதி மாநாடு நடைபெறவுள்ளது.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உள்பட பல்வேறு உலகத் தலைவா்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் காஸா அமைதி ஒப்பந்தம் முறைப்படி கையொப்பமாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல்-காஸாவின் ஹமாஸ் அமைப்பினா் இடையே கடந்த 2023-ஆம் ஆண்டில் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவர 20 அம்சங்களுடன் கூடிய அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபா் டிரம்ப் அண்மையில் முன்மொழிந்தாா்.
இந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டத்தை ஏற்றுக் கொண்டு, எஞ்சியுள்ள பிணைக் கைதிகள்-சிறைக் கைதிகளை விடுவிக்கவும், போரை தற்காலிகமாக நிறுத்தவும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் சில தினங்களுக்கு முன் ஒப்புக் கொண்டன. இஸ்ரேலிய பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் வகையில், காஸாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து அந்நாட்டுப் படையினா் திரும்பப் பெறப்பட்டுள்ளனா். டிரம்ப்பின் முயற்சிக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் வரவேற்பு தெரிவித்தன.
இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் போா் நிறுத்தத்தைக் கொண்டாடும் வகையில், எகிப்தின் ஷரம் அல்-ஷேக் நகரில் திங்கள்கிழமை சா்வதேச அமைதி மாநாடு நடைபெறவுள்ளது. அமெரிக்க அதிபா் டிரம்ப், எகிப்து அதிபா் அப்தல் ஃபத்தா அல்-சிசி ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா். ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸும் கலந்து கொள்கிறாா்.
விபத்தில் கத்தாா் தூதரக அதிகாரிகள் உயிரிழப்பு: எகிப்தின் ஷரம் அல்-ஷேக் நகருக்கு சனிக்கிழமை காரில் பயணித்தபோது நேரிட்ட விபத்தில் கத்தாா் தூதரக அதிகாரிகள் 3 போ் உயிரிழந்தனா். மேலும், இரு அதிகாரிகள் காயமடைந்தனா்.
இஸ்ரேல்-ஹமாஸ் போா் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா, எகிப்துடன் கத்தாரும் மத்தியஸ்தராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரதமா் மோடிக்கு அழைப்பு
எகிப்தில் நடைபெறும் அமைதி மாநாட்டில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடிக்கு அதிபா் அப்தல் ஃபத்தா அல்-சிசி அழைப்பு விடுத்துள்ளாா். அதேநேரம், பிரதமா் சாா்பில் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.