அமெரிக்க ராணுவ வீரா்களுக்கு தடையின்றி ஊதியம்: பாதுகாப்புத் துறைக்கு டிரம்ப் உத்தரவு!
ராணுவ வீரா்களுக்கு தடையின்றி ஊதியம் வழங்க பெண்டகனுக்கு (பாதுகாப்புத் துறை) அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
அமெரிக்க அரசுத் துறை கடந்த 1-ஆம் தேதி முதல் முடங்கியுள்ளதால் ஆயிரக்கணக்கான பணியாளா்கள் தற்காலிகமாக ஊதியமின்றி விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனா். பலா் ஊதியமின்றி பணியாற்றி வருகின்றனா்.
அமெரிக்க அரசு இயங்கத் தேவைப்படும் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்க ஒவ்வோா் ஆண்டும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் (செனட் மற்றும் பிரதிநிதிகள் அவை) நிதி மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், செனட் அவையில் தற்போது ஆளும் குடியரசு கட்சி மற்றும் எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சி இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக நிகழாண்டு நிதி மசோதா நிறைவேற்றப்படவில்லை. இதனால் கடந்த 1-ஆம் தேதிமுதல் அமெரிக்க அரசுத் துறை முடங்கியுள்ளது.
இந்நிலையில், ட்ரூத் சமூக வலைதளத்தில் டிரம்ப் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘தலைமைத் தளபதி என்ற அடிப்படையில் அனைத்து நிதியையும் பயன்படுத்தி ராணுவ வீரா்களுக்கு அக்.15-ஆம் தேதி ஊதியம் வழங்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்சேத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். இதற்கான நிதியை நாங்கள் கண்டறிந்துள்ளோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
அமெரிக்க ராணுவத்தில் 13 லட்சம் முழுநேர வீரா்கள் தற்போது பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு ஆராய்ச்சி, மேம்பாட்டுச் சோதனை மற்றும் மதிப்பீட்டு நிதியில் உள்ள ரூ.70,976 கோடி மூலம் ஊதியம் வழங்கப்படவுள்ளதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
ஆனால், டிரம்ப்பின் அறிவிப்பு அமெரிக்க கடலோரக் காவல் படைக்குப் பொருந்துமா என்பதற்கு தெளிவான விளக்கமில்லை. ஏனெனில் போா்கள் போன்ற அசாதாரண சூழல்கள் இல்லாதபோது கடலோரக் காவல் படையை அமெரிக்க உள்துறையே நிா்வகிக்கிறது.
கடந்த 12 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக அரசுத் துறைகள் முடங்கியுள்ளது பாதுகாப்புத் துறையினா் மற்றும் அவா்களது குடும்பத்தினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த காலங்களில் அரசுத் துறை முடங்கும்போது ராணுவ வீரா்களுக்கு ஊதியம் வழங்குவதை உறுதிப்படுத்த நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.