
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக உள்ள நிலையில் ஹமாஸ் வசம் உள்ள 7 பிணைக் கைதிகள் இன்று(அக். 13) விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் 2 ஆண்டுகளைக் கடந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்தில் இன்று நடைபெறும் உச்சி மாநாட்டில் கையழுத்தாகவுள்ளது. அமெரிக்க அதிபா் டிரம்ப், எகிப்து அதிபா் அப்தல் ஃபத்தா அல்-சிசி ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா். ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸும் கலந்து கொள்கிறாா்.
2 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் குண்டுகள் சத்தம் இல்லாமல் மக்கள் இருக்கின்றனர். காஸா மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் மீண்டும் தங்கள் பகுதிகளுக்குத் திரும்பி வருகின்றனர். ஆனால் காஸாவில் தற்போது மக்கள் வாழ்வதற்கான சூழல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஹமாஸ் வசம் உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளில் முதலாவதாக 7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். முதல் 7 பேரையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அமைப்பிடம் ஹமாஸ் ஒப்படைத்தது.
தொடர்ந்து இஸ்ரேலுக்கு வந்த 7 பேருக்கும் இஸ்ரேல் அரசு சார்பிலும் அவர்களது குடும்பத்தினர் சார்பிலும் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இறந்தவர்களின் உடலையும் ஹமாஸ் ஒப்படைக்கும் என்று இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.
அவர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலாக இஸ்ரேல் வசம் உள்ள 1,900க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகள் விடுக்கப்பட உள்ளனர்.
இஸ்ரேல் - காஸா இடையேயான ஒப்பந்த கையெழுத்தாவதையொட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேலுக்கு வருகை தந்துள்ளார். தொடர்ந்து இஸ்ரேல் அதிபருடன் அவர் எகிப்து செல்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.