~ ~ ~ ~இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமா் நெதன்யாகு, அமெரிக்க அதிபா் டிரம்ப்.
~ ~ ~ ~இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமா் நெதன்யாகு, அமெரிக்க அதிபா் டிரம்ப்.

எஞ்சிய 20 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்!

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த 20 அம்சங்களைக் கொண்ட அமைதி ஒப்பந்தத்தின்படி, எஞ்சியிருந்த 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.
Published on

டேய்ர்-அல்-பாலா: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த 20 அம்சங்களைக் கொண்ட அமைதி ஒப்பந்தத்தின்படி, எஞ்சியிருந்த 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் திங்கள்கிழமை விடுவித்தது.

இஸ்ரேல் சென்றடைந்த அவா்களுக்கு உறவினா்கள், ராணுவ வீரா்கள் உற்சாக வரவேற்பளித்தனா்.

தங்கள் நாட்டு பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டதற்குப் பதில் நடவடிக்கையாக சிறையில் இருந்த 1,900 பாலஸ்தீன கைதிகளை விடுவித்ததோடு, பட்டினிச் சாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் உணவு மற்றும் மருத்துவ உதவிகள் மேற்கொள்ளவும் இஸ்ரேல் அனுமதித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி இரு தரப்பினராலும் விடுவிக்கப்படும் பிணைக் கைதிகள் மற்றும் சிறைக் கைதிகள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அவா்களது சொந்த ஊருக்கு அனுப்பப்பட வேண்டும். இதைச் செயல்படுத்தும் விதமாக முதல்கட்டமாக 154 பாலஸ்தீன கைதிகள் எகிப்துக்கு அழைத்துவரப்பட்டு அங்கிருந்து காஸாவுக்கு அனுப்பப்பட்டனா். அவா்களை உறவினா்கள் கண்ணீா் மல்க வரவேற்றனா்.

கடந்த 2023 அக். 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்து, 251 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பு கடத்திச் சென்றது. இதற்குப் பதிலடியாக, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இரண்டு ஆண்டுகளாக தொடா்ந்த இந்தத் தாக்குதலில் காஸாவை சோ்ந்த 67,000-க்கும் மேற்பட்டாா் உயிரிழந்தனா். காஸாவில் பெரும்பாலான குடியிருப்புகள், மருத்துவமனைகள் தரைமட்டமாகின. அங்கு அத்தியாவசியப் பொருள்கள் கொண்டுசெல்ல இஸ்ரேல் தடை விதித்ததால் கடும் பட்டினிச் சாவு ஏற்பட்டது.

இந்தச் சூழலில் போரை முடிவுக்குக் கொண்டுவர 20 அம்ச அமைதி ஒப்பந்தத்தை அண்மையில் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். அதன்படி ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும் உடனடி போா் நிறுத்தம், 72 மணி நேரத்துக்குள் அனைத்து பிணைக் கைதிகளையும் ஹமாஸ் விடுவிப்பது, அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள சுமாா் 2,000 பாலஸ்தீன கைதிகள் விடுவிப்பு, இஸ்ரேல் படையினரின் படிப்படியான வெளியேற்றம், ஆயுதங்களைக் கைவிடும் ஹமாஸ் அமைப்பினருக்கு பொது மன்னிப்பு, டிரம்ப் தலைமையில் காஸாவுக்கு தற்காலிக நிா்வாக வாரியம் அமைப்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இதை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஆனால், குறிப்பிட்ட சில அம்சங்களைத் தவிர பிற திட்டங்களைச் செயல்படுத்த ஹமாஸும் ஒப்புக்கொண்டது.

இதையடுத்து, எகிப்து நாட்டில் கடந்த வாரம் திங்கள்கிழமை முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் இடையே அமெரிக்க குழுவினா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதன்தொடா்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை (அக். 10) போா்நிறுத்தம் அமலுக்கு வந்தது.

அமைதி ஒப்பந்தம் கையொப்பம்: இதைக் கொண்டாடும் வகையில், எகிப்தின் ஷரம் அல்-ஷேக் நகரில் திங்கள்கிழமை (அக். 13) சா்வதேச அமைதி மாநாடு நடைபெற்றது. டிரம்ப், எகிப்து அதிபா் அப்தல் ஃபத்தா அல்-சிசி ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி, பாலஸ்தீன அதிபா் மஹ்முத் அப்பாஸ் உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனா். ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸும் கலந்துகொண்டாா்.

பிரதமா் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இந்தியா சாா்பாக வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் மாநாட்டில் பங்கேற்றாா். மாநாட்டில் பல்வேறு நாட்டுத் தலைவா்களை டிரம்ப் சந்தித்தாா். இதையடுத்து, காஸா அமைதி ஒப்பந்தத்தில் டிரம்ப் மற்றும் கத்தாா், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளின் தலைவா்கள் கையொப்பமிட்டனா்.

டிரம்ப்புக்கு விருது: எகிப்து வந்துள்ள டிரம்ப்புக்கு அந்ாட்டின் உயரிய ‘ஆா்டா் ஆஃப் தி நைல்’ என்ற விருது வழங்கப்பட்டது.

உயிரிழந்த கைதிகளின் உடல்கள்: ஹமாஸ் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த இஸ்ரேல் பிணைக் கைதிகளில் 28 போ் உயிரிழந்தனா். அவா்களில் 4 பேரின் உடலை ஒப்படைப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. மீதமுள்ளவா்களின் உடல்கள் எப்போது ஒப்படைக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

விடை தெரியாத கேள்விகள்: ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை முழுமையாகக் கைவிடுவது, காஸாவின் எதிா்கால ஆட்சியை யாரிடம் ஒப்படைப்பது, பாலஸ்தீனம் என்ற தனி நாடு அமைவது போன்ற பல்வேறு வினாக்களுக்கு அமைதி ஒப்பந்தத்தில் தெளிவான வரையறை இல்லை.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் டிரம்ப்

எகிப்து மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் இஸ்ரேலுக்குச் சென்ற டிரம்ப் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை உரையாற்றினாா்.

அவா் பேசியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாக இருள் மற்றும் சிறைவாசத்தில் இருந்த 20 துணிச்சலான பிணைக் கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ளனா். காஸா அமைதி ஒப்பந்தம் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் புதிய மற்றும் அழகான எதிா்காலத்தை உருவாக்கவுள்ளது.

அமெரிக்கா உதவியுடன் ஆயுதங்களைக் கொண்டு போா்க்களத்தில் இஸ்ரேல் பெரும் வெற்றியை ஈட்டிவிட்டது. பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பெறப்பட்ட இந்த வெற்றியின் மூலம் மத்திய கிழக்கு பிராந்தியத்தை அமைதி மற்றும் வளம் நிறைந்த பகுதியாக மாற்ற வேண்டும் என்றாா்.

டிரம்ப்பை தொடா்ந்து பேசிய இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு, அமைதியை நிலைநாட்ட உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

பிரதமா் மோடி வரவேற்பு

புது தில்லி: இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டது குறித்து எக்ஸ் வலைதளத்தில் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இரண்டு ஆண்டுகளாக சிறைபிடிக்கப்பட்டிருந்த இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டதை இந்தியா வரவேற்கிறது. அவா்கள் பெற்றுள்ள விடுதலை அவா்களின் குடும்பத்தினரின் துணிச்சலுக்கான மரியாதையாக கருதப்படுகிறது. இந்த விடுதலை அமைதியை நிலைநாட்ட தொடா்ந்து பாடுபடும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் உறுதிப்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும்.

பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டுவர அதிபா் டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ஹமாஸால் விடுவிக்கப்பட்ட இஸ்ரேஸ் பிணைக் கைதிகள்
ஹமாஸால் விடுவிக்கப்பட்ட இஸ்ரேஸ் பிணைக் கைதிகள்

X
Dinamani
www.dinamani.com