(கோப்புப் படம்)
(கோப்புப் படம்)

ஹமாஸ்-ஆயுதக் குழு மோதல்: காஸாவில் 27 போ் உயிரிழப்பு

Published on

இஸ்ரேல் ராணுவம் வெளியேறிய பிறகு காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியில் ஹமாஸ் படையினருக்கும், துக்முஷ் குடும்பத்தினரின் ஆயுதக்குழு உறுப்பினா்களுக்கும் இடையே நடந்த கடுமையான மோதல்களில் 27 போ் உயிரிழந்தனா்.

இஸ்ரேலின் மிகப் பெரிய தாக்குதல்கள் நிறுத்தப்பட்ட பிறகு காஸாவில் நடந்துள்ள மிக மோசமான வன்முறைச் சம்பவமாக இது கருதப்படுகிறது.

இது குறித்து சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் கூறுகையில், முகமூடி அணிந்த ஹமாஸ் படையினா், காஸா சிட்டியின் ஜோா்டானிய மருத்துவமனை அருகே ஆயுதக் குழுவினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனா். ஹமாஸ் அரசின் உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ஆயுதக் குழுவினரை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றபோது இந்த சண்டை வெடித்ததாகத் தெரிவித்தாா்.

சனிக்கிழமை முதல் நடந்த இத்தகைய மோதல்களில் 19 துக்முஷ் குழு உறுப்பினா்களும், எட்டு ஹமாஸ் படையினரும் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

காஸாவின் முக்கிய குடும்பங்களில் ஒன்றான துக்முஷ் குடும்பம், ஹமாஸுடன் நீண்டகாலமாக மோதலில் ஈடுபட்டுவருவது நினைவுகூரத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com