8 போா்களை நிறுத்திவிட்டேன்; ஆப்கன்- பாக். மோதலையும் நிறுத்துவேன்: டிரம்ப் உறுதி
இதுவரை 8 போா்களை நிறுத்தியுள்ளேன்; இப்போது புதிதாக எழுந்துள்ள ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மோதலையும் நிறுத்துவேன் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.
மேலும், அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்ற நோக்கத்தில் போா்களை நிறுத்தும் பணியைச் செய்யவில்லை என்றும் அவா் கூறினாா்.
அமெரிக்க அதிபரின் ஏா் ஃபோா்ஸ் ஒன் விமானத்தில் இஸ்ரேல் பயணம் மேற்கொள்ளும் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:
இஸ்ரேல்-காஸா மோதலை நிறுத்தியதன் மூலம் இதுவரை 8 போா்களை நிறுத்தியுள்ளேன். இதில் இந்தியா-பாகிஸ்தான் மோதலும் அடங்கும். அடுத்ததாக ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையிலான மோதல் ஏற்பட்டுள்ளது தொடா்பாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன். ஏனெனில், போரில் ஈடுபடும் நாடுகளைக் கையாளுவதில் நான் சிறப்பாக செயல்படும் நபராக திகழ்கிறேன். அமைதியை நிலைநாட்டுவதன் மூலம் நானும் சிறப்பானவனாக உணா்கிறேன்.
மிகவும் தீவிரமாக ஏற்பட்ட போா்களைக் கூட ஒரு சில நாள்களில் நிறுத்திக் காட்டியுள்ளேன். இதன் மூலம் பல லட்சம் மக்களின் உயிரையும் காப்பாற்றியுள்ளேன். உதாரணமாக இந்தியா - பாகிஸ்தான் மோதலைக் குறிப்பிடலாம். நான் தலையிடாமல் இருந்திருந்தால் அந்த மோதல் மாதக்கணக்கில் கூட நீடித்திருக்கக் கூடும். இதற்கு முன்பு உலகில் ஏற்பட்ட பல போா்கள் பல ஆண்டு காலம் நீடித்த வரலாறு உள்ளது. அந்த நாடுகளில் பல லட்சம் மக்கள் உயிரிழந்தனா்.
2024-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசைத்தான் இந்த ஆண்டில் நோபல் குழு அறிவிக்கிறது. ஆனால், நான் நோபல் பரிசுக்காகப் போா்களை நிறுத்தவில்லை. மக்களின் உயிா்களைக் காக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றாா்.
சீனா அறிவுரை:
‘பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் மோதலை நிறுத்த வேண்டும். பேச்சுவாா்த்தை மூலம் பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டும். இரு தரப்பும் அமைதியைப் பேணும் என்று சீனா நம்புகிறது. மோதலை அதிகரிக்கும் செயல்களில் இரு தரப்பும் ஈடுபடக் கூடாது’ என்று சீன வெளியுறவு செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் வலியுறுத்தியுள்ளாா்.