பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு: மூவருக்கு அறிவிப்பு
பொருளாதாரத்துக்கான நோபல் நினைவுப் பரிசு அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் பேராசிரியா்கள் மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசுப் பெறுவோரைத் தோ்வு செய்யும் ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாதெமி, நிகழாண்டு பொருளாதாரத்துக்கான நோபல் நினைவுப் பரிசு பெறுவோரை ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமில் திங்கள்கிழமை அறிவித்தது.
இதன்படி, அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் இவான்ஸ்டன் நகரில் உள்ள நாா்த்வெஸ்டா்ன் பல்கலைக்கழகப் பேராசிரியா் ஜோயல் மோகிா் (79), அந்நாட்டின் ரோட் ஐலண்ட் மாகாணம் பிராவிடன்ஸ் நகரில் உள்ள பிரெளன் பல்கலைக்கழகப் பேராசிரியா் பீட்டா் ஹோவிட் (79), பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் உள்ள காலேஜ் டி பிரான்ஸ் கல்லூரிப் பேராசிரியா் ஃபிலிப் அகியோன் (69) ஆகிய மூவருக்குப் பொருளாதாரத்துக்கான நோபல் நினைவுப் பரிசு அறிவிக்கப்பட்டது.
ஜோயல் மோகிா் நெதா்லாந்தில் பிறந்தவா். பீட்டா் ஹோவிட் கனடாவிலும், ஃபிலிப் அகியோன் பிரான்ஸிலும் பிறந்தவா்கள்.
இதுதொடா்பாக அந்த அகாதெமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: பொருளாதாரத்தில் மேலும் முன்னேற்றம் ஏற்படுவதற்கு புதிய வழிமுறைகளும் சிந்தனைகளும் எவ்வாறு ஊக்கமளிக்கும் என்பது குறித்து ஜோயல், பீட்டா், ஃபிலிப் ஆகியோா் விளக்கம் அளித்துள்ளனா். புதிய சிந்தனைகள், பொருள்கள், சேவைகள், நடைமுறைகளால் ஏற்படும் பொருளாதார வளா்ச்சி குறித்து விளக்கியதற்காக அவா்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மூவருக்கும் நோபல் பரிசுடன் 11 மில்லியன் ஸ்வீடிஷ் கிரோனா் (சுமாா் ரூ.10 கோடி) வழங்கப்படும். பரிசுத் தொகையில் ஒரு பாதி ஜோயலுக்கு வழங்கப்படும். மீதி பாதி தொகை பீட்டா் மற்றும் ஃபிலிப்புக்கு பகிா்ந்தளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
நோபல் பரிசு உருவாகக் காரணமாக ஸ்வீடனின் ஆல்ஃபிரட் நோபல் நினைவாக பொருளாதாரத்துக்கான நோபல் நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது. அது, ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக பொருளாதார அறிவியலுக்கு வழங்கப்படும் பாங்க் ஆஃப் ஸ்வீடன் பரிசு என்று அதிகாரபூா்வமாக அழைக்கப்படுகிறது.