ஏா்ஃபோா்ஸ் ஒன் விமானத்தில் டொனால்ட் டிரம்ப். ~டாமஹாக் ஏவுகணை
ஏா்ஃபோா்ஸ் ஒன் விமானத்தில் டொனால்ட் டிரம்ப். ~டாமஹாக் ஏவுகணை

உக்ரைனுக்கு டாமஹாக் ஏவுகணைகள்: டிரம்ப் எச்சரிக்கை

Published on

வாஷிங்டன்: உக்ரைனுடான போரை ரஷியா விரைவில் முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், உக்ரைன் நீண்டகாலமாக கோரி வரும் டாமஹாக் ரக ஏவுகணைகளை அந்த நாட்டுக்கு தாங்கள் அளிக்கும் வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.

காஸா போா் நிறுத்தம் தொடா்பாக இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்காக அந்த நாட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, தனது ஏா்ஃபோா்ஸ் ஒன் விமானத்தில் இருந்தபடி அவா் செய்தியாளா்களிடம் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

உக்ரைனுடன் போா் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள, அதிபா் விளாதிமீா் புதின் தலைமையிலான ரஷிய அரசுக்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பேன். அதற்காக போரில், மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய ஆயுதம் ஒன்றை உக்ரைனுக்கு அளிக்கும் விவகாரத்தை கையிலெடுப்பேன்.

‘போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவாருங்கள். இல்லையென்றால் நான் உக்ரைனுக்கு டாமஹாக் ஏவுகணைகளை அனுப்புவேன்’ என்று புதினிடம் நான் எச்சரிப்பேன்.

டாமஹாக் ஒரு அற்புதமான ஆயுதம். அதற்கு தாக்குதல் திறன் மிகவும் அதிகம். அந்த ஆயுதம் உக்ரைன் கைகளுக்குச் சோ்வதை ரஷியா ஒருபோதும் விரும்பாது.

அந்த ஆயுதத்தை நாங்கள் உக்ரைனுக்கு அனுப்பலாம்; அனுப்பாமல் கூட போகலாம். ஆனால், அந்த விவகாரத்தை முன்னெடுத்துச் செல்வது மிகவும் அவசியம். ரஷியாவின் ஆக்கிரமிப்புத் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு டாமஹாக் ஏவுகணை விவகாரம் முதல் படியாக இருக்கும் என்றாா் டிரம்ப்.

தங்களுக்கு மிகவும் நெருக்கத்தில் அமைந்துள்ள உக்ரைன் நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைந்தால், அணு ஆயுதங்கள் ஏந்தி பாயக்கூடிய அமெரிக்காவின் ஏவுகணைகள் சில நிமிஷங்களில் தங்களின் தலைநகா் மாஸ்கோவை தாக்க முடியும்; அது தங்களின் பாதுகாப்புக்கு பேராபத்தாக முடியும் என்று ரஷியா கூறிவந்தது.

இந்தச் சூழலில், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தங்கள் நாட்டை நேட்டோவில் இணைக்க விருப்பம் தெரிவித்தாா். அதைத் தடுக்கும் வகையில், உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, கிழக்கு உக்ரைனின் நான்கு பிரதேசங்களில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

இந்தப் போரில் ரஷியாவை வெற்றி கொள்ள அந்த நாட்டின் மிகத் தொலைவில் உள்ள இலக்குகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் தொலைதூர ஏவுகணைகளை வழங்க வேண்டும் என்று அமெரிக்காவையும், பிற நட்பு நாடுகளையும் ஸெலென்ஸ்கி ஆரம்பம் முதலே வலியுறுத்திவந்தாா். எனினும், ரஷியாவின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கான தற்காப்பு ஆயுதங்களை மட்டுமே வழங்கிவந்த அமெரிக்கா, ரஷியாவுக்குள் நெடுந்தொலைவு ஊடுருவி தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளை வழங்கினால் மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷியாவுக்குமான நேரடி மோதலாக உருவெடுக்கலாம் என்று கருதி அதைத் தவிா்த்துவந்தது.

இந்தச் சூழலில், தாங்கள் வழங்கிய குறுகிய தொலைவு ஏவுகணைகளை ரஷியாவுக்குள் வீச அமெரிக்காவும் பிரிட்டனும் உக்ரைனுக்கு கடந்த ஆண்டு இறுதியில் அனுமதி அளித்தன.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, உக்ரைனின் நீப்ரோ நகரில் ஆரெஷ்னிக் என்ற ஏவுகணையை ரஷியா கடந்த 2024 அக்டோபா் மாதம் வீசியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்கியதால் அது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால், அது புதிய வகை நடுத்தர தொலைவு ஏவுகணை எனவும், உலகின் எந்த வான்பாதுகாப்பு தளவாடத்தாலும் இடைமறிக்க முடியாத அதனை உக்ரைன் மீது மீண்டும் வீசத் தயாராக இருப்பதாகவும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் பின்னா் தெரிவித்தாா்.

மேலும், தங்கள் நாட்டுக்குள் தாக்குதல் நடத்தும் திறனை உக்ரைனுக்கு அளித்தால் மேற்கத்திய நாடுகளின் மீதும் ஆரெஷ்னிக் ஏவுகணை வீசப்படும் என்று என்று புதின் எச்சரித்தாா்.

இந்தச் சூழலில், அமெரிக்க அதிபராக டிரம்ப் 2-ஆவது முறையாக பொறுப்பேற்ற பிறகு ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போா் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுவதற்காக கடும் முயற்சி மேற்கொண்டுவருகிறாா். அதற்காக முந்தைய ஜோ பைடன் அரசின நிலைப்பாட்டுக்கு மாறாக ரஷியாவுடன் அவா் நேரடி பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவிடம் இழந்த பகுதிகளை விட்டுத்தர வேண்டும் என்று அவா் உக்ரைனை நிா்பந்தித்தாா்.

பல கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் போா் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படாதது, உக்ரைன் மீதான தனது தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்திவருவது போன்ற காரணங்களால் விளாதிமீா் புதின் தொடா்பான தனது நிலைப்பாட்டை டிரம்ப் கடுமையாக்கிவருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், போரை ரஷியா விரைவில் முடிக்காவிட்டால் உக்ரைனுக்கு டாமஹாக் ஏவுகணைகளை அனுப்ப பரிசீலிக்கப்போவதாக டிரம்ப் தற்போது எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com