காஸா போர் நிறுத்தம்: தொடரும் சிக்கல்கள்

காஸாவின் ஆட்சி யார் வசம் இருக்கும், பாலஸ்தீன அரசு உருவாக்கம் போன்ற கடினமான சிக்கல்கள் தொடர்கின்றன.
காஸாவின் கான் யூனிஸ் பகுதிக்கு பேருந்தில் வந்த இஸ்ரேலால் விடுவிக்கப்பட்ட பாலஸ்தீன சிறைக் கைதிகள்.
காஸாவின் கான் யூனிஸ் பகுதிக்கு பேருந்தில் வந்த இஸ்ரேலால் விடுவிக்கப்பட்ட பாலஸ்தீன சிறைக் கைதிகள்.
Published on
Updated on
1 min read

ஹமாஸ் அமைப்பு பிணைக் கைதிகளையும், இஸ்ரேல் அரசு பாலஸ்தீன சிறைக் கைதிகளையும் விடுவித்ததன் மூலம் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை நடைமுறைப்படுத்துவது அந்தப் பகுதியில் நிரந்தர அமைதி ஏற்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், ஹமாஸ் படையினர் ஆயுதங்களைக் கைவிடுவது, காஸாவின் ஆட்சி யார் வசம் இருக்கும், பாலஸ்தீன அரசு உருவாக்கம் போன்ற கடினமான சிக்கல்கள் தொடர்கின்றன.

இதனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் பரிந்துரைக்கப்பட்டு, இஸ்ரேல் மற்றும் ஹமாஸால் முன்னெடுத்துச் செல்லப்படும் காஸா போர் நிறுத்தத் திட்டத்தின் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த முக்கிய பிரச்னைகள் ஒருபுறம் இருக்க, தற்போதைய ஆரம்ப கட்டங்களே முன்னோக்கி நகர்வதில் பிரச்னைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. முதலாவதாக, ஹமாஸிடம் உயிருடன் எஞ்சியிருந்த 20 பிணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டது இஸ்ரேலியர்களுக்கு தற்போது மகிழ்ச்சியை அளித்தாலும், உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்களைத் திரும்பக் கொண்டுவருவது அவர்களுக்கு முக்கியமாக உள்ளது.

ஏற்கெனவே சில பிணைக் கைதிகளின் உடல்களை ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தது. போர்நிறுத்தத்தின் முதல் கட்டத்தில் மேலும் 24 உடல்கள் ஒப்படைக்கப்படவுள்ளன. அவற்றை செவ்வாய்க்கிழமைக்குள் முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்று இஸ்ரேல் கெடு விதித்துள்ளது.

பிணைக் கைதிகளின் சடலங்கள் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும் என்பது டிரம்ப் போர் நிறுத்த திட்டத்தின் அம்சங்களில் ஒன்று என்பதால், அதை நிறைவேற்ற அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவை, உயிரிழந்த பிணைக் கைதிகளின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த விவகாரம் போர் நிறுத்த நீட்டிப்பில் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.

இது தவிர, காஸாவுக்கு உணவு மற்றும் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தாராளமாக அனுமதிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்களும் அதிகரித்துவருகின்றன. காஸாவில் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டிருந்தாலும், இஸ்ரேல் குண்டுவீச்சால் அழிக்கப்பட்ட அந்தப் பகுதியில் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. அடிப்படை சேவைகள் சீர்குலைந்துள்ளன. பலர் இருப்பிடங்களை இழந்துள்ளனர்.

இந்தச் சூழலில் மறுகட்டமைப்புக்கு யார் செலவழிக்கப் போகிறார்கள்? அதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும். அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? என்பது கணிக்கமுடியாத மர்மமாகவே தொடர்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com