
உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்வதாக பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் தெரிவித்தார்.
கடந்த வாரம் பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் 2 நாள் பயணமாக இந்தியா வந்தார். பின்னர் பிரிட்டன் திரும்பிய அவர், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
கடந்த ஜூலையில் இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. வணிகத்தில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.
உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது. 2028-ஆம் ஆண்டுக்குள் உலகில் 3-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாகும் பாதையில் இந்தியா பயணித்து வருகிறது.
இதன் காரணமாக கடந்த ஜூலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இருநாடுகளும் மேற்கொண்டன. நானும் இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய பிரிட்டன் வர்த்தக குழுவுடன் இந்தியா சென்றேன். இந்த ஒப்பந்தம் இந்தியாவில் பிரிட்டன் வணிகத்துக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
இந்தியாவில் மேலும் புதிதாக பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட உள்ளன. இதன்மூலம், இந்தியாவில் கல்வி புகட்டும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் பிரிட்டன் முன்னணியில் இருக்கும்.
எனது இந்திய பயணத்தின் மூலம், இருநாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, கார் உற்பத்தி, பிரிட்டனில் ஹிந்தி திரைப்படங்கள் தயாரிப்பு உள்பட புதிய ஒப்பந்தங்கள் மற்றும் முதலீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த முதலீடுகள் மூலம் பிரிட்டனுக்கு 1.3 பில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ.15,350 கோடி) கிடைக்கும். 10,600 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.