வரி விதிப்பு எச்சரிக்கை: "பிரிக்ஸ்' கூட்டமைப்பில் சேராமல் பல நாடுகள் விலகல்; அமெரிக்க அதிபர் டிரம்ப்

"பிரிக்ஸ்' கூட்டமைப்பு என்பது அமெரிக்க டாலர் மீது நடத்தப்படும் தாக்குதல்; நான் வரி விதிப்பு எச்சரிக்கை விடுத்த பிறகு அதில் சேர முயற்சித்த பல நாடுகள் விலகியுள்ளன' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்ஏபி
Published on
Updated on
1 min read

"பிரிக்ஸ்' கூட்டமைப்பு என்பது அமெரிக்க டாலர் மீது நடத்தப்படும் தாக்குதல்; நான் வரி விதிப்பு எச்சரிக்கை விடுத்த பிறகு அதில் சேர முயற்சித்த பல நாடுகள் விலகியுள்ளன' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ளன.

இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட பொருளாதார பலமிக்க நாடுகளும், அமெரிக்காவின் ஆதிக்க செயல்பாடுகளுக்கு எதிரான நாடுகளும் இதில் இருப்பதால் இக்கூட்டமைப்பு அமெரிக்கர்களுக்கு எதிரான கொள்கைகளை உடைய கூட்டணி என்று டிரம்ப் ஏற்கெனவே விமர்சித்துள்ளார். மேலும், பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

கடந்த ஆகஸ்ட் இறுதியில் நடைபெற்ற பிரிக்ஸ் வருடாந்திர மாநாட்டின்போது, பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் பாரபட்சமான பொருளாதாரத் தடை, வரிகள் விதிப்பை ரஷியாவும், சீனாவும் எதிர்க்கிறது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் கூறியிருந்தார். இந்தியா மீது டிரம்ப் 50 சதவீத வரி விதித்ததால் இந்த மாநாட்டின்போது சீனாவுடனும் இந்தியா இணக்கத்துடன் செயல்பட்டது. டிரம்ப்பின் தன்னிச்சியான வரி விதிப்புகளை எதிர்க்கும் மிகப்பெரிய சர்வதேச கூட்டமைப்பாகவும் பிரிக்ஸ் திகழ்கிறது.

இந்நிலையில் ஆர்ஜென்டீனா அதிபர் ஜாவியர் மில்லேவை டிரம்ப் சந்தித்தார். அப்போது, ஆர்ஜென்டீனா பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைந்துவிடக் கூடாது என்று வலியுறுத்திய டிரம்ப் கூறியதாவது:

உலகின் வலுவான கரன்சியாக டாலர் திகழ வேண்டும். அது சர்வதேச அளவில் தொடர்ந்து முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். தங்கள் வெளிநாட்டு வர்த்தகத்தில் டாலரைப் பயன்படுத்துபவர்களுக்கு அமெரிக்கா சாதகமாக இருக்கும். அதே நேரத்தில் டாலரைப் பயன்படுத்தாமல் தவிர்க்க முயல்பவர்களுக்கு அமெரிக்கா சாதகமாக இருக்காது.

"பிரிக்ஸ்' கூட்டமைப்பு என்பது அமெரிக்க டாலர் மீது நடத்தப்படும் தாக்குதல். அந்த கூட்டமைப்பில் எந்த நாடு இணைந்தாலும் எங்களுக்குக் கவலையில்லை. ஆனால், அதன் உறுப்பு நாடுகள் மீது அமெரிக்கா வரி விதிக்கும். அப்போது அனைவரும் அதில் இருந்து விலகிச் செல்வார்கள். நான் வரி விதிப்பு எச்சரிக்கை விடுத்த பிறகு அதில் சேர முயற்சித்த பல நாடுகள் அத்திட்டத்தைக் கைவிட்டன.

பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் அமெரிக்காவுடன் விளையாட நினைத்தால், அந்த நாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் ஒவ்வொரு பொருள்கள் மீதும் கடும் வரி விதிக்கப்படும். ஜோ பைடன் அல்லது கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராகத் தேர்வாகி இருந்தால், இந்த நேரத்தில் உலகின் பணமாக டாலர் இருந்திருக்காது. நான் அதிபரானதன் மூலம்தான் அமெரிக்க டாலரை உலகின் பணமாக தொடர்ந்து தக்கவைத்துள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com