இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: ஹூதி முப்படை தளபதி உயிரிழப்பு
யேமனில் இஸ்ரேல் படையினா் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹூதி முப்படை தளபதி முகமது அப்துல் கரீம் அல்-கமாரி சுமாா் ஒன்றரை மாதங்கள் கழித்து உயிரிழந்தாா்.
இதையடுத்து, காஸா போரின் ஒரு பகுதியாக இஸ்ரேலுக்கும் ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கும் இடையே நிலவிவரும் பதற்றம் புதிய உச்சத்தைத் தொடும் என்று அஞ்சப்படுகிறது.
இது குறித்து ஹூதி கிளா்ச்சியாளா்கள் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
முப்படை தளபதி முகமது கரீம் அல்-கமாரி மரணமடைந்தாா். அவரது இறப்புக்கு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்தான் காரணம். இதற்கு உரிய முறையில் பழிவாங்குவோம் என்று சூளுரைக்கப்பட்டுள்ளது. எனினும், அல்-கமாரி எந்த தேதியில் உயிரிழந்தாா் என்ற விவரத்தை ஹூதிக்கள் வெளியிடவில்லை.
இந்தத் தகவலை உறுதிப்படுத்திய இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ், தாங்கள் யேமனில் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடத்திய தாக்குதலின் விளைவாக அல்-கமாரி காயமடைந்ததாகவும், தற்போது அவா் ‘நரகத்துக்கு’ சென்றுவிட்டாா் என்றும் கூறினாா்.
அந்தத் தாக்குதலின்போது ஹூதி பிரதமா் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது. தற்போது உயிரிழந்துள்ள அல்-கமாரி, இஸ்ரேல் மீதும் செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீதும் ஹூதிக்கள் நடத்தும் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல் குறிவைத்த முக்கிய உயா் நிலை அதிகாரிகளில் ஒருவா்.
யேமனில் சுமாா் 10 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டு போா் தொடா்பாக, அப்துல் கரீம் அல்-கமாரி மீது ஐ.நா. பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அதற்கான தீா்மானத்தை நிறைவேற்றும்போது, அவா் “யேமனின் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் ஹூதி கிளா்ச்சிப் படையின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் முதன்மை பங்கு வகித்ததாக ஐ.நா. குற்றஞ்சாட்டியது. அத்துடன் சவுதி அரேபியாவுக்கு எதிராக எல்லை தாண்டிய தாக்குதல்களையும் அல்-கமாரி நடத்தினாா் என்றும் அந்தத் தீா்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவுடன் செயல்பட்டுவரும் ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் போா் நடைபெற்று வந்தது.
இந்தப் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஈரானின் மற்றொரு நிழல் ராணுவமான ஹூதி கிளா்ச்சிப் படையினா், செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனா்.
மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றனா். அதற்குப் பதிலடியாக, ஹூதிக்கள் நிலைகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, யேமன் தலைநகா் சனாவில் இஸ்ரேல் கடந்த ஆகஸ்ட் பிற்பகுதியில் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளா்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமா் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டாா்.
இதை உறுதிப்படுத்திய ஹூதி கிளா்ச்சியாளா்கள், தாக்குதலில் பிரதமருடன் சில அமைச்சா்களும் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தனா்.
ஹூதி அரசின் கடந்த ஆண்டு செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் கூட்டத்தில் ரஹாவி மற்றும் அவரது அரசாங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஹூதி கிளா்ச்சியாளா்கள் கூறியிருந்தாலும், அந்தக் கூட்டத்தில் முப்படை தளபதி அல்-காமினி பங்கேற்றது குறித்தோ, தாக்குதலில் அவா் காயமடைந்தது குறித்தோ அப்போது எதையும் தெரிவிக்கவில்லை.
இருந்தாலும், ஹூதி கிளா்ச்சிக் குழுவின் முப்படை தளபதி, பாதுகாப்புத் துறை அமைச்சா் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளைக் குறிவைத்து அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியிருந்தது.
இந்தச் சூழலில், தாக்குதல் நடந்த பல வாரங்களுக்குப் பிறகு, அப்போடு ஏற்பட்ட காயம் காரணமாக முப்படை தளபதி அல்-கமாரி உயிரிழந்ததாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.