
போர் நிறுத்த விதிகளை ஹமாஸ் அமல்படுத்தத் தவறினால் இஸ்ரேல் தனது நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான 2 ஆண்டு போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. டிரம்ப்பின் 20 அம்ச திட்டத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
அதன்படி ஹமாஸ் வசம் உள்ள உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகள் முதலில் விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது இறந்த சடலங்களை படிப்படியாக இஸ்ரேலிடம் ஒப்படைத்து வருகிறது. பதிலாக இஸ்ரேல், பாலஸ்தீன கைதிகளை படிப்படியாக விடுவித்து வருகிறது.
ஹமாஸ் வசம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளின் சடலங்களையும் விரைந்து ஒப்படைக்க வேண்டும் என இஸ்ரேல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால் இறந்த உடல்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் கூடுதல் நேரம் வேண்டும் என்றும் ஹமாஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தங்களால் முடிந்தவரை அனைத்து உடல்களையும் ஒப்படைத்துவிட்டதாக ஹமாஸ் கூறுகிறது.
ஹமாஸ் தனது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் இஸ்ரேல் மீண்டும் ராணுவ நடவடிக்கை எடுக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிப்பேன் என டிரம்ப் கூறினார்.
ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப், "நான் ஒரு வார்த்தை சொன்னால் இப்போது இஸ்ரேல், காஸாவின் தெருக்களுக்குத் திரும்பும். இஸ்ரேல் ராணுவத்தினர், காஸா உள்ளே சென்று அவர்களைத் தாக்க முடியும். நான் அவர்களை தடுத்து நிறுத்தியிருக்கிறேன்.
ஹமாஸில் என்ன நடக்கிறதோ அது விரைவில் சரி செய்யப்படும். அவர்கள் ஆயுதங்களை கீழிறக்கவில்லை எனில் நாங்கள் இறக்க வைப்போம். அது மிகவும் மோசமாகவும் விரைவாகவும் நடக்கும்" என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.