இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையை எங்கள் மண்ணில் அனுமதிக்க மாட்டோம்: இலங்கை பிரதமா்
இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை இலங்கை மண்ணில் இருந்து மேற்கொள்ள ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என அந்நாட்டு பிரதமா் ஹரிணி அமரசூா்யா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வியாழக்கிழமை வந்த ஹரிணி அமரசூா்யா தில்லி பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் ஹிந்து கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவ்வாறு பேசினாா். இவா் இந்தக் கல்லூரியில்1994-இல் சமூகவியல் பட்டப்படிப்பை நிறைவு செய்தவராவாா்.
நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது: கடும் பொருளாதார சிக்கலில் இலங்கை தவித்தபோது இருண்ட காலத்தில் உதவிசெய்யும் உற்ற நண்பராக இந்தியா மேற்கொண்ட உதவிகளை மறக்க இயலாது.
நம்மைப் போன்ற சாதாரண குடிமக்களுக்கு வழங்கப்படும் பொதுக் கல்வியானது நாட்டின் உயா்பதவிகளை அடைய வழிவகுப்பதே இலங்கை மற்றும் இந்திய ஜனநாயகத்தின் அழகு. இருநாடுகளுக்கும் இடையே நீண்ட பாரம்பரிய மற்றும் கலாசார உறவும் பரஸ்பர மரியாதையும் உள்ளது.
சில விவகாரங்களில் முரண்பாடுகள் இருப்பினும் இருநாடுகளும் எப்போதும் ஒரே குடும்பமாகவே இருந்து வருகின்றன. எனவே, இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை இலங்கை மண்ணில் இருந்து மேற்கொள்ள ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
வீட்டிலோ அலுவலகத்திலோ அல்லது நாடுகளுக்கு இடையில் எப்போதும் பாலங்களை கட்டுங்கள்; தடைகளை உருவாக்காதீா்கள் என்றாா்.
பிரதமராக பதவியேற்றபின் முதல்முறையாக இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ள ஹரிணி அமரசூா்யா வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கரை வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.