ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மோதல் தொடா் கண்காணிப்பு: இந்தியா
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையே எல்லையில் நிலவும் மோதல்களை தொடா்ந்து கண்காணித்து வருவதாக இந்தியா வியாழக்கிழமை தெரிவித்தது.
ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் கடந்த 9-ஆம் தேதி பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்தது. போா் விமானம் மூலம் பாகிஸ்தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஆப்கானிஸ்தான் குற்றஞ்சாட்டியது. இதையடுத்து இருநாட்டுப் படைகளும் எல்லையில் கடந்த வார இறுதியில் கடும் மோதலில் ஈடுபட்டனா். இதில் 58 பாகிஸ்தான் வீரா்களை கொன்ாக தலிபானும், 200 தலிபான் மற்றும் அவா்கள் ஆதரவு பயங்கரவாதிகளைக் கொன்ாக பாகிஸ்தான் ராணுவமும் தெரிவித்தன.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை பாகிஸ்தான் ராணுவமும் ஆப்கன் தலிபான்களும் எல்லையில் புதன்கிழமை மீண்டும் மோதலில் ஈடுபட்டனா். இதில் ஏராளமான எதிா்த்தரப்பு படையினரைக் கொன்ாக இரு தரப்பினருமே கூறினா்.
இதைத்தொடா்ந்து, புதன்கிழமை மாலை தொடங்கி 48 மணிநேரம் இடைக்கால போா்நிறுத்தத்தை மேற்கொள்ள இருதரப்பும் முடிவுசெய்தன.
இந்த மோதல் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒற்றுமை மற்றும் சுதந்திரத்துக்கு இந்தியா மதிப்பளிக்கிறது. அந்நாட்டுடன் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ள மோதலில் 3 அம்சங்கள் தெளிவாகியுள்ளன.
ஒன்று, பயங்கரவாதிகள், பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளிக்கிறது. இரண்டு, உள்நாட்டு தோல்விகளை மறைக்க அண்டை நாடுகள் மீது பழிபோடும் பாகிஸ்தானின் பழக்கம். மூன்று, ஆப்கானிஸ்தானின் இறையாண்மைக் கொள்கை பாகிஸ்தானை கோபமடையச் செய்துள்ளது என்றாா்.