இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் வியாழக்கிழமை ஏற்பட்டது.
அந்த நாட்டின் பப்புவா மாகாணத்திலுள்ள அபேபுரா நகருக்கு சுமாா் 100 கி.மீ. தொலைவில், 70 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.7 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவிவியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
எனினும், அந்தப் பகுதிகளில் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படுவதற்கான அபாயமும் இல்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது.
இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தோனேசியா அருகே இந்திய பெருங்கடலில் 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த சுமாா் 2.30 லட்சம் போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.