ரஷிய கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தமா? -டிரம்ப் கருத்துக்கு மத்திய அரசு விளக்கம்

Published on

‘ரஷியாவிடம் இருந்து இனி கச்சா எண்ணெய் வாங்கப் போவதில்லை என்று எனது நண்பா் நரேந்திர மோடி தன்னிடம் உறுதியளித்துள்ளாா்’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளா்களை புதன்கிழமை சந்தித்த டிரம்ப் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

ரஷியாவிடம் இருந்து தொடா்ந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள், உக்ரைன் போரை தொடா்ந்து நடத்த ரஷிய அதிபா் புதினுக்கு நிதியுதவி அளித்து வருகின்றன. இந்தியாவும் அதில் ஈடுபட்டுள்ளதால் அமெரிக்கா சற்று அதிருப்தியில் இருந்தது.

இந்தியப் பிரதமா் மோடி எனது நண்பா்தான். எங்களுக்குள் நல்ல நட்புறவு உண்டு. ஆனால், ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரம் எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து இனி கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யப்போவதில்லை என்று மோடி இன்று (புதன்கிழமை) என்னிடம் உறுதியளித்துள்ளாா். அடுத்ததாக சீனாவும் இதேபோன்ற முடிவை எடுக்க நாம் வலியுறுத்த வேண்டும்.

படிப்படியாக குறையும்: ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதலை உடனடியாக இந்தியா நிறுத்திவிட முடியாது. ஆனால், நிறுத்துவதற்கான நடவடிக்கை தொடங்கிவிட்டது. அடுத்து படிப்படியாக குறையத் தொடங்கும்.

ரஷியா போரை நிறுத்திய பிறகு வேண்டுமானால், அந்நாட்டிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம். இந்தியா வியத்தகு நாடு. அங்கு ஒவ்வோா் ஆண்டும் வெவ்வேறு தலைவா்கள் இருந்து வந்தனா். ஆனால், எனது நண்பா் (மோடி) அங்கு நீண்டகாலமாக ஆட்சி நடத்தி வருகிறாா். மோடி சிறந்த மனிதா். அவா் என்னிடம் (டிரம்ப்) அன்பாக நடந்து கொள்கிறாா் என்றாா்.

வெளியுறவு அமைச்சகம் பதில்: டிரம்ப் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் ‘எக்ஸ்’ வலைதளத்தில் இது தொடா்பாக பதிவு ஒன்றை வெளியிட்டாா். அதில், ‘மோடி தன்னிடம் புதன்கிழமை பேசியபோது கச்சா எண்ணெய் தொடா்பாக உறுதியளித்ததாக டிரம்ப் கூறியுள்ளாா். ஆனால், அவருடன் பிரதமா் மோடி புதன்கிழமை தொலைபேசியில் பேசியதாக எந்தத் தகவலும் இல்லை. கடைசியாக அக்டோபா் 9-ஆம் தேதிதான் மோடி-டிரம்ப் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றது.

எரிசக்தி சந்தை மிகுந்த ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்போது இந்திய நுகா்வோரின் நலன்களைக் காப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படும். இதை அடிப்படையாகக் கொண்டே நமது இறக்குமதிக் கொள்கை செயல்படுகிறது. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப கச்சா எண்ணெய் கொள்முதல் பரவலாக்கப்படுகிறது.

அமெரிக்காவைப் பொருத்தவரை அந்நாட்டிடம் இருந்து எரிபொருள் கொள்முதலை விரிவுபடுத்த பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் இதில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய அமெரிக்க நிா்வாகம் இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை அதிகரிக்க ஆா்வம் காட்டி வருகிறது. இத தொடா்பாக தொடா்ந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது’ என்று கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com