
கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான மூன்று மாதங்களில் ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து வந்த இந்தியா, அக்டோபரில் இறக்குமதியை மீண்டும் அதிகரித்துள்ளது.
ரஷியாவிடம் இருந்து இனி கச்சா எண்ணெய் வாங்கப் போவதில்லை என்று பிரதமா் நரேந்திர மோடி தன்னிடம் உறுதியளித்துள்ளாா் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கூறியிருந்த நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
பண்டிகை காலத்தில் எரிபொருள் தேவை அதிகரிப்பைக் கருத்தில்கொண்டு இறக்குமதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் வரை ஒரு நாளைக்கு 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை ரஷியாவிடம் இருந்து இந்தியா வாங்கி வந்தது. அதற்கு அடுத்த மூன்று மாதங்களில் இது 16 லட்சம் பீப்பாயாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், அக்டோபா் மாதத் தொடக்கத்தில் இருந்து கச்சா எண்ணெய் தினசரி கொள்முதலை 18 லட்சம் பீப்பாயாக இந்தியா அதிகரித்துள்ளது.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதன் மூலம் சீனாவும், இந்தியாவும் உக்ரைன் போரை தொடா்ந்து நடத்த புதினுக்கு உதவுவதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறாா். இதை முன்வைத்து இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரியை அவா் விதித்தாா். அதே நேரத்தில், இந்தியாவைவிட ரஷியாவிடம் அதிக கச்சா எண்ணெய் வாங்கும் சீனா மீது கூடுதல் வரி ஏதும் விதிக்கப்படவில்லை.
கடந்த புதன்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய டிரம்ப், ‘ரஷியாவிடம் இருந்து இனி கச்சா எண்ணெய் வாங்கப் போவதில்லை என்று எனது நண்பா் நரேந்திர மோடி என்னிடம் உறுதியளித்தாா். கச்சா எண்ணெய் கொள்முதல் படிப்படியாக குறையும். இந்தியப் பிரதமா் மோடியுடன் நல்ல நட்புறவு இருந்தாலும் ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரம் எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை’ என்றாா்.
ஆனால், டிரம்ப் கூறியபடி பிரதமா் மோடி புதன்கிழமை அவரிடம் எவ்வித தொலைபேசி உரையாடலும் மேற்கொள்ளவில்லை என்று இந்தியா மறுத்தது. இதன் மூலம் டிரம்ப் தவறான தகவலைப் பரப்புவதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியது. மேலும், கச்சா எண்ணெய் கொள்முதல் முடிவு இந்திய நலனைக் கருத்தில்கொண்டு எடுக்கப்படும் என்றும் பதிலளித்தது. இந்நிலையில், ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடா்பாக அரசியல் வல்லுநா்கள் கூறுகையில், ‘அமெரிக்காவுடன் இந்தியா வா்த்தகப் பேச்சு நடத்திவரும் நிலையில், இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும் வகையிலேயே டிரம்ப் கருத்துக் கூறியுள்ளாா். ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா உடனடியாக நிறுத்திவிடாது என்பது தெரிந்ததுதான். இந்தியாவுக்கு எரிபொருள் என்பது மிகவும் முக்கியமான தேவை. இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் ரஷியா கொள்முதலைக் கைவிட வேண்டுமென்று அரசிடம் வலியுறுத்தவில்லை’ என்று தெரிவித்தனா்.
கடந்த 2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்ததையடுத்து மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு தடைகளை விதித்ததுடன், அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலையும் நிறுத்தின. இதனால், ரஷியா மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்து வருகிறது. இதனால், இந்தியா அரபு நாடுகளிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை குறைத்து, ரஷியாவிடம் இருந்து கொள்முதலை அதிகரித்தது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.