பாலியல் குற்றச்சாட்டு: பட்டம் துறந்தாா் பிரிட்டன் இளவரசா்
அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடா்பு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, பிரிட்டன் மன்னா் சாா்லஸின் இளைய சகோதரரான இளவரசா் ஆண்ட்ரூ (65) தனது அரச பட்டங்களை துறந்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மன்னருடனும், குடும்பத்தினருடனும் கலந்துரையாடிய பிறகு, என் மீதான குற்றச்சாட்டுகள் மன்னா் மற்றும் அரச குடும்பத்தின் பணிகளுக்கு இடையூறாக உள்ளது என்ற முடிவுக்கு வந்தேன். எனவே, இனி எனது பட்டங்களையோ, வழங்கப்பட்ட கௌரவங்களையோ பயன்படுத்த மாட்டேன். இருந்தாலும், ஏற்கெனவே கூறியது போல என் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுக்கிறேன் என்றாா் அவா்.
இதையடுத்து, ‘யாா்க் பிரதேசத்தின் டியூக்’ என்ற பட்டம் உள்ளிட்ட அனைத்து பட்டங்களையும் ஆண்ட்ரூ இனி பயன்படுத்த மாட்டாா். அவரின் முன்னாள் மனைவி சாரா பொ்குசனும் ‘யாா்க் பிரதேசத்தின் டச்சஸ்’ என்ற பட்டத்தை இனி பயன்படுத்த மாட்டாா். ஆனால் அவா்களது மகள்களான இளவரசிகள் பீட்ரிஸ் மற்றும் யூஜெனியின் பட்டங்களில் எவ்வித மாற்றமும் இல்லை.
ஆண்ட்ரூ மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தி, தற்கொலை செய்துகொண்ட வா்ஜினியா கியூஃப்ரே என்ற பெண் மரணத்துக்கு முன் எழுதிய ‘நோபடிஸ் கோ்ள்’ என்ற சுயசரிதை அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. அது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில் இளவரசா் ஆண்ட்ரூ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.
ஆண்ட்ரூவின் இந்த அறிவிப்பு, அவப் பெயரில் இருந்து அரச குடும்பத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.