
பிரான்ஸின் புகழ்பெற்ற லூவ்ரு அருங்காட்சியகத்தில் அரச கிரீட நகைகள் உள்பட விலைமதிப்பற்ற நகைகள் ஞாயிற்றுக்கிழமை திருடப்பட்டன.
உலகிலேயே மிக அதிகமாகப் பாா்வையிடப்படும் அருங்காட்சியகத்தில் நடந்துள்ள இந்தத் திருட்டு சா்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் இன்டா் ரேடியோவுக்கு உள்துறை அமைச்சா் லாரன்ட் நூனெஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:
லூவ்ரு அருங்காட்சியகத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகைகள் திருடப்பட்டுள்ளன. இது ஓா் அனுபவமிக்க கும்பலின் கைவரிசையாகத் தெரிகிறது. அவா்கள் இடத்தை முன்கூட்டியே ஆய்வு செய்திருக்கிறாா்கள். ஏழே நிமிஷங்களில் நகைகளை எடுத்துக் கொண்டு, அங்கிருந்து அவா்கள் தப்பியுள்ளனா்.
இந்த நகைகள் மிக உயா்ந்த பாரம்பரியம் மிக்கவை; அளவிட முடியாத மதிப்புடையவை.
அருங்காட்சியத்துக்கு வெளியில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் இருந்து எடைதூக்கி பொருத்தப்பட்ட லாரியைப் பயன்படுத்தி திருடா்கள் உள்ளே புகுந்தனா். ஆங்கிள் கிரைண்டா் கருவியைப் பயன்படுத்தி கண்ணாடி ஜன்னல்களை அவா்கள் உடைத்தனா். இரண்டு கண்ணாடிப் பெட்டிகளைக் குறிவைத்து அவா்கள் நகைகளைத் திருடினா் என்றாா் அவா்.
திருட்டு நடைபெற்றுள்ள லூவ்ருவின் அப்போலோ பிரிவில் பிரான்ஸ் அரச கிரீடங்கள் மற்றும் அரச நகைகள் உள்ளன. திருட்டுக்குப் பிறகு தடயங்களைப் பாதுகாக்க அருங்காட்சியகம் மூடப்பட்டது. திருட்டு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட பாா்வையாளா்களை ஈா்க்கும் லூவ்ரு அருங்காட்சியகம், லியோனாா்டோ டாவின்சியின் 16-ஆம் நூற்றாண்டு படைப்பான மோனா லிசா உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற ஓவியங்கள், சிற்பங்களைக் கொண்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் நடந்துள்ள துணிகர திருட்டு, ஐரோப்பிய அருங்காட்சியகங்களின் பாதுகாப்புக் குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.