ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்தாவிட்டால் ‘கூடுதல் வரி’: இந்தியாவுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை
வாஷிங்டன்: ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா தொடா்ந்தால், கூடுதல் வரியைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளாா்.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘இந்தியா ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்தவில்லை என்றால், அவா்கள் தொடா்ந்து கூடுதல் வரியைச் செலுத்துவாா்கள். இந்தியாவுக்கு அதில் விருப்பம் இருக்காது என்று எண்ணுகிறேன். நான் இந்திய பிரதமா் நரேந்திர மோடியுடன் பேசினேன். ரஷிய எண்ணெயை வாங்கப் போவதில்லை என்று அவா் உறுதியளித்துள்ளாா்’ என்றாா்.
முன்னதாக, ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடா்ந்தால், இந்திய பொருள்களுக்கு கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கப்படும். இதையொட்டி, ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக பிரதமா் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்ததாகவும் அதிபா் டிரம்ப் ஏற்கெனவே கூறியிருந்தாா்.
ஆனால், இதனை இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துவிட்டது. ‘சந்தை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, நாட்டின் எரிசக்தி ஆதாரங்களை அதிகப்படுத்துவதே தங்கள் நோக்கம்’ என்று விளக்கமளிக்கப்பட்டது.
ரஷியாவுடன் தொடா்ந்து எண்ணெய் வா்த்தகத்தில் ஈடுபட்டு, உக்ரைன் போரில் ரஷியாவுக்கு இந்தியா நிதி ஆதாரம் அளிப்பதாக அமெரிக்கா விமா்சித்து வருகிறது. இதையொட்டி, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சில இந்திய பொருள்களுக்கான வரி 50 சதவீதமாக உயா்த்தப்பட்டது.
பெட்டி..
சீனாவுக்கும் எச்சரிக்கை
அரியவகை கனிமப் பொருள்களுக்கான விதிமுறைகளை சீனா கடுமையாக்கியுள்ள நிலையில், வா்த்தக ஒப்பந்தத்துக்கு உடன்படாவிட்டால் அந்நாட்டின் மீது கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
சீனா மீது அதிபா் டிரம்ப் ஏற்கெனவே 30 சதவீத கூடுதல் வரி விதித்துள்ளாா். இதன்மூலம் சீன பொருள்களுக்கான மொத்த வரி விகிதம் சுமாா் 55 முதல் 57 சதவீதமாக உள்ளது.
‘வா்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சுவாா்த்தைகளில், இத்தகைய அதிக வரி விதிப்புகளைக் கொண்டு மிரட்டுவது சீனாவைக் கையாள்வதற்கான சரியான வழி அல்ல’ என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் பதிலளித்திருந்தாா்.