
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு போர் நிறுத்த விவகாரத்தில் ரஷியாவுடன் உக்ரைன் சமரசம் செய்யக் கூடாது என்று ஐரோப்பிய நட்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
முன்னதாக, உக்ரைன் விவகாரம் குறித்து ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசி வழியாக டிரம்ப் கடந்த வாரம் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். சுமார் இரண்டரை மணி நேரம் வரை நீடித்த இந்த உரையாடலில், உக்ரைனில் ரஷியாவின் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த பல்வேறு வழிகள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, கடந்த வெள்ளிகிழமை, உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கியுடன் டிரம்ப் நேரில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இவ்விரு தலைவர்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பின், டிரம்ப்பின் முந்தைய நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. ரஷியாவும் உக்ரைனும் எந்த இடத்தில் இருக்கிறார்களோ அங்கேயே நிறுத்திக்கொள்ளுங்கள் என்றிருக்கிறார். ரஷியாவை உக்ரைனால் வீழ்த்த முடியுமா? என்ற சந்தேகத்தையும் அவர் திங்கள்கிழமை எழுப்பியிருக்கிறார்.
இந்த நிலையில், உக்ரைனின் நிலம் ரஷியா வசம் செல்லக்கூடாது; அந்த வழியில் சமரசம் கூடாது என்று ஐரோப்பிய நட்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இது குறித்து, பிரிட்டன், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நார்வே, போலந்து, டென்மார்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து உக்ரைன் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்: ‘ரஷியாவைன் கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலான முடக்கப்பட்டுள்ள வெளிநாட்டுச் சொத்துகளை இந்தப் போரில் உக்ரைனுக்கு உதவ பயன்படுத்துவதென திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் அமைதி நிலவ டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அவர்கள், ஹங்கேரியின் புதாபெஸ்ட் நகரில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் டிரம்ப் மேற்கொள்ளவிருக்கும் பேசுவார்த்தையை வரவேற்றுள்ளனர். எனினும், சர்வதேச எல்லைகள் எதையும் படைப் பலத்தால் தன் வசமாக்கிக்கொள்ளக் கூடாது என்ற நெறிமுறையில் உறுதியாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் நிலப்பகுதியில் ஐந்தில் ஒரு பங்கை ரஷியா கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், போர் நிறுத்தம் ஏற்பட இடத்தை விட்டுக்கொடுத்து சமரசம் செய்துகொள்வதை உக்ரைனுக்கு விருப்பமும் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் இல்லை’ என்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.