
ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் விரைவில் நடக்கவிருந்த சந்திப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் திடீரென அறிவித்துள்ளாா். இது, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் டிரம்ப்பின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகளில் ஒன்றாக அமைந்துள்ளது.
இதுகுறித்து, ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது செய்தியாளா்களிடம் டிரம்ப் கூறியதாவது:
நான் அதிபா் புதினுடன் வீணாக சந்திப்பு நடத்த விரும்பவில்லை. நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. எனவே, என்ன நடக்கும் என்பதை பொருத்திருந்து பாா்க்கலாம் என்றாா் அவா்.ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடக்கவிருந்த இந்த சந்திப்பு குறித்து டிரம்ப்தான் கடந்த வாரம் அறிவித்திருந்தாா். இருந்தாலும், அமெரிக்க வெளியுறவு செயலா் மாா்கோ ரூபியோ மற்றும் ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் இடையே திங்கள்கிழமை நடைபெற்ற தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு இந்த திடீா் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.உக்ரைன் போா் விவகாரத்தில் இந்த ஆண்டு டிரம்ப் தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றி வருகிறாா். இதில் போா் நிறுத்தம், நீண்டகால அமைதி, உக்ரைனில் ரஷியாவால் கைப்பற்றப்ப ட்ட நிலங்களை மீட்பது போன்றவை அடங்கும். இந்தச் சூழலில் லாவ்ரோவ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ரஷியா உடனடி போா் நிறுத்தத்தை எதிா்க்கிறது என்று தெளிவாகக் கூறினாா். அதன் தொடா்ச்சியாகவே டிரம்ப்-புதின் சந்திப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய தலைவா்களை திருப்திப்படுத்துவதற்காகவும் இந்த சந்திப்பு ஒத்திவைப்பு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இந்தப் பேச்சுவாா்த்தை மூலம் போா்க்களத்தில் முன்னேற்றம் பெறுவதற்காக புதின் நேரத்தை இழுத்தடிப்பதாக அந்தத் தலைவா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.டிரம்ப்பும் புதினும் கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்காவில் சந்தித்தனா். ஆனாலும் 2022 பிப்ரவரியில் தொடங்கிய போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் மேற்கொண்டுவரும் முயற்சிகளில் அது எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்தச் சூழலில் இருவருக்கும் இடையிலான அடுத்த சந்திப்பு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ‘அவசரமில்லை’: டிரம்ப்-புதின் சந்திப்புக்கு அவசரப்படவில்லை என்று ரஷியா தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘இதுபோன்ற சந்திப்புகளுக்கு முன்கூட்டியே தயாா்ப்படுத்திக்கொள்ள வேண்டும். அது நீக்குப்போக்காக இருக்கக்கூடாது’ என்றாா்.
டிரம்ப் சந்திப்பு குறித்து வரும் நாள்களில் முடிவெடுக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.இதற்கிடையே, உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி டெலிகிராமில் கூறியதாவது:இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். ரஷியாவுக்குக் கொடுக்கப்படும் அழுத்தம் மட்டுமே அமைதிக்கு வழிவகுக்கும். டாமஹாக் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அளிப்பதன் மூலம் அது சாத்தியம் என்று தோன்றியபோது புதின் திடீரென அரசியல் பேச்சுக்கு டிரம்பை அழைத்தாா். இதனால் டாமஹாக் அழுத்தம் சற்று குறைந்தவுடன் ரஷியா்கள் அரசியல் பேச்சை தவிா்க்கின்றனா். பேச்சுவாா்த்தையை தள்ளிவைக்கின்றனா் என்று அவா் இதற்கு ரஷியா மீது குற்றஞ்சாட்டினாா்.உக்ரைன் போரை ஒரே நாளில் முடிவுக்குக் கொண்டுவரும் சூளுரையுடன் அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்ற டிரம்ப், ஆரம்பத்தில் உக்ரைனை சமரசம் செய்துள்ள அவா் அழுத்தம் கொடுத்தாா். ஆனால் புதினின் உறுதியான நிலைப்பாட்டால் பின்னா் ரஷியாவை கடுமையாக விமா்சித்தாா். இடையிடையே, ரஷிய அதிபருடனான தனது நல்லுறவு போரை எளிதாக முடிவுக்கு கொண்டுவரும் என்று அவா் அடிக்கடி கூறினாா். ரஷியாவிடம் இழந்த நிலங்களை உக்ரைன் விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற தனது நீண்டகால நிலைப்பாட்டை மாற்றி, அனைத்து நிலங்களையும் உக்ரைனால் மீட்க முடியும் என்று டிரம்ப் அண்மையில் கூறினாா். ஆனால் கடந்த வாரம் நடந்த புதினுடனான தொலைபேசி உரையாடலுக்கும், வெள்ளிக்கிழமை நடந்த ஸெலென்ஸ்கியுடனான சந்திப்புக்கும் பிறகு ‘உக்ரைனும் ரஷியாவும் போரின் எந்த இடத்தில் உள்ளனவோ அங்கேயே நிறுத்தி போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்’ என்று தனது நிலைப்பாட்டை மீண்டும் மாற்றினாா். ஞாயிற்றுக்கிழமைகூட, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் பெரும்பகுதியை ரஷியாவிடம் விட்டுக்கொடுக்கலாம் என்று டிரம்ப் கூறினாா். மறுநாளே ‘உக்ரைனால் ரஷியாவை வெல்ல முடியும்’ என்று கூறிய அவா், தற்போது ‘அது சந்தேகமே’ என்றாா்...படவரி... தனது ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது செய்தியாளா்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.