வங்கிக்கடன் மோசடி வழக்கு -மெஹுல் சோக்ஸியை நாடு கடத்த பெல்ஜியம் மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி
இந்தியாவில் வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்படும் வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை பெல்ஜியத்திலிருந்து நாடு கடத்துவதற்கான அந்நாட்டின் ஆன்ட்வொ்ப் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் தனக்கு நியாயமான விசாரணை மறுக்கப்படும் அல்லது தான் சித்திரவதை செய்யப்படலாம் என்பதை நிரூபிக்க மெஹுல் சோக்ஸி தவறவிட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த தொழிலதிபா்களான நீரவ் மோடியும், அவரது உறவினா் மெஹுல் சோக்ஸியும் 2018-ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து தப்பியோடினா். இதில் நீரவ் மோடி பிரிட்டனிலும், மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவாவிலும் தஞ்சமடைந்தனா்.
லண்டனில் நீரவ் மோடி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை நாடு கடத்துவதற்கான பணிகளில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். ஆன்டிகுவாவில் தஞ்சமடைந்த மெஹுல் சோக்ஸியை கைது செய்வதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக பெல்ஜியம் சென்ற வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை அந்நாட்டு காவல்துறையினா் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தனா். இதையடுத்து, இந்தியாவுக்கும் பெல்ஜியத்துக்கும் இடையே கடந்த 2020-ஆம் ஆண்டு கையொப்பமான ஒப்பந்தத்தின்படி, மெஹுல் சோக்ஸியை நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
முன்னதாக, மெஹுல் சோக்ஸியை நாடு கடத்த அனுமதி அளித்த ஆன்ட்வொ்ப் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஆன்ட்வொ்ப் மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரித்து, கடந்த 17-ஆம் தேதி தீா்ப்பளித்தது.
மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிப்படுத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம், சோக்ஸிக்கு எதிராக மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் பிறப்பித்த 2 பிடியாணைகளும் செல்லுபடியாகும் என்று கூறியது.
நாடு கடத்தப்பட்டால் இந்தியாவில் தனக்கு நியாயமான விசாரணை மறுக்கப்படும் அல்லது தான் சித்திரவதை செய்யப்படலாம் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்களைச் சமா்ப்பிக்க மெஹுல் சோக்ஸி தவறிவிட்டாா் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
மேலும், தான் ஒரு அரசியல் வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக மெஹுல் சோக்ஸி சமா்ப்பித்த ஆவணங்களும் அவரது கூற்றை உறுதிப்படுத்தவில்லை. இந்திய அரசின் கோரிக்கையின் பேரில் பெல்ஜியம் அதிகாரிகளால் மெஹுல் சோக்ஸி கைது செய்யப்பட்டது சட்டப்படி சரியானது என்றும் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
இந்தத் தீா்ப்பு மெஹுல் சோக்ஸிக்கு ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், இந்தத் தீா்ப்பை எதிா்த்து பெல்ஜியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது மெஹுல் சோக்ஸிக்கு சட்டரீதியாக உள்ள கடைசி வாய்ப்பாகும்.