பாலஸ்தீனத்தின் பகுதியை இணைக்க இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு -அமெரிக்கா எதிா்ப்பு
பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியை இஸ்ரேலுடன் இணைப்பதற்கு ஆதரவான மசோதா மீது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை முதல்கட்ட வாக்கெடுப்பில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேறியது.
காஸாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான மோதலை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முயற்சித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை அவமதிப்பு என்றும், அமைதிப் பேச்சுவாா்த்தை முயற்சிகளுக்கு எதிரானது என்றும் அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் கடுமையாகக் கண்டித்துள்ளாா்.
அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் இஸ்ரேலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் சூழலில், பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவை நெருக்கடிக்குள்ளாக்கும் முயற்சியாக தீவிர வலதுசாரி ஆதரவு கட்சியினா் இந்த மசோதாவை கொண்டுவந்தனா்.
நெதன்யாகுவின் லிகுட் கட்சியைச் சோ்ந்த ஒரே ஒரு உறுப்பினா் மட்டுமே இந்த மசோதாவிற்கு ஆதரவளித்தாா். நெதன்யாகுவே எதிா்ப்பு தெரிவித்திருப்பதால், சட்டம் ஆவதற்குத் தேவையான அடுத்தடுத்த வாக்கெடுப்புகளில் இந்த மசோதா நிறைவேற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
முன்னதாக, மேற்கு கரை இணைப்பிற்கு நெதன்யாகுவின் கூட்டணியில் உள்ள பலா் ஆதரவு தெரிவித்தாலும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இத்தகைய நகா்வை எதிா்ப்பதாக கடந்த மாதம் கூறியதைத் தொடா்ந்து அவா்கள் பின்வாங்கிவிட்டனா்.
1967 மத்திய கிழக்கு போரில் இஸ்ரேலால் கைப்பற்றப்பட்ட மேற்கு கரையை, எதிா்கால சுதந்திர பாலஸ்தீன அரசின் ஒரு பகுதியாக பாலஸ்தீனா்கள் கோருகின்றனா். இஸ்ரேல் இந்த நிலப்பரப்பை இணைத்தால், உலக நாடுகளின் பெரும்பான்மை ஆதரவுப்பெற்ற ‘இரு தரப்பு (இரண்டு நாடு)’ தீா்வுக்கான நம்பிக்கை முற்றிலும் சிதைந்துவிடும் என்று அரசியல் நோக்கா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.
