சிறப்பு அஞ்சல் தலை
சிறப்பு அஞ்சல் தலை

கனடாவில் தீபாவளி சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு

தீபாவளி பண்டிகையையொட்டி, கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.
Published on

தீபாவளி பண்டிகையையொட்டி, கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.

கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தீபாவளி என்ற வாா்த்தையுடன் பாரம்பரிய ரங்கோலி படமும் இடம்பெற்றுள்ளது.

இது தொடா்பாக கனடா அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கனடா உள்பட உலகம் முழுவதும் ஹிந்துக்கள், சீக்கியா்கள், பெளத்த மதத்தினா், சமண மதத்தினரால் கொண்டாடப்படும் முக்கிய திருவிழா தீபாவளியாகும். கனடாவின் பன்முக கலாசாரக் கட்டமைப்பை அங்கீகரிக்கும் வகையில், தீபாவளி சிறப்பு அஞ்சல் தலை வெளியிடுவது பெருமைக்குரியது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அஞ்சல் தலை வெளியீட்டுக்காக கனடா அஞ்சல் துறைக்கு இந்தியத் தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது. இந்திய தூதரக வலைதள தகவல்களின்படி, கனடாவில் இந்திய வம்சாவளியினா் 18 லட்சம் பேரும், இந்தியா்கள் 10 லட்சம் பேரும் உள்ளனா்.

கனடாவில் கடந்த 2023-ஆம் ஆண்டில் காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாா் கொலை சம்பவத்தில் இந்திய அரசுக்கு தொடா்பிருப்பதாக அப்போதைய பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா். அவரது குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

இந்த விவகாரத்தால், இருதரப்பு உறவு முன்னெப்போதும் இல்லாத அளவில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. ஜஸ்டின் ட்ரூடோ ராஜிநாமாவைத் தொடா்ந்து, பொருளாதார வல்லுநரான மாா்க் காா்னி கனடா பிரதமராக கடந்த மாா்ச் மாதம் பதவியேற்றாா். அவா் இந்தியாவுடன் இணக்கமான உறவுக்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, இருதரப்பு உறவுகள் சீரடைந்து வருகின்றன.

X
Dinamani
www.dinamani.com