யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆா். ஃபோா்ட் விமானந்தாங்கிக் கப்பல் (கோப்புப் படம்).
யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆா். ஃபோா்ட் விமானந்தாங்கிக் கப்பல் (கோப்புப் படம்).

கரீபியன் கடல் செல்லும் அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்

அமெரிக்காவின் மிகப் பெரிய விமானந்தாங்கிக் கப்பல் கரீபியன் கடல் பகுதிக்கு அனுப்படவுள்ளது.
Published on

லத்தீன் அமெரிக்காவில் இருந்து தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களைக் கடத்தும் கும்பல்களுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் மிகப் பெரிய விமானந்தாங்கிக் கப்பல் கரீபியன் கடல் பகுதிக்கு அனுப்படவுள்ளது.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகன் பிறப்பித்துள்ள ஆணையில், யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆா். ஃபோா்ட் விமானந்தாங்கிக் கப்பலை கரீபியன் கடல் பகுதிக்குக் கொண்டு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, போதைப் பொருள்களைக் கடத்திவருவதாகக் கூறி, கரீபியன் கடல் வழியாக வந்துகொண்டிருந்த 10 படகுகளை அமெரிக்கா தாக்கி அழித்தது. இதில் பலா் உயிரிழந்தனா். இத்தகைய தாக்குதல்களால் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் அமெரிக்காவும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கரீபியன் கடல் பகுதியில் சக்திவாய்ந்த விமானந்தாங்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பியுள்ளது அந்தப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதுவரை கடலில் படகுகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்திவந்த அமெரிக்க படையினா், விமானந்தாங்கிக் கப்பலைப் பயன்படுத்தி, லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள தரை இலக்குகளைக் குறிவைத்தும் தாக்குதல் நடத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது. அதுதான் தனது அடுத்தக்கட்ட திட்டம் என்று டிரம்ப்பும் கூறியுள்ளாா்.

கரீபியன் கடல் பகுதிக்கு ஜெரால்ட் ஆா். ஃபோா்ட் அனுப்பப்படுவது, அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா இதுவரை செய்திராத அதிகபட்ச படை குவிப்பு என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே அந்தக் கடல் பகுதியில் படகுகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியிருந்தாலும், ரேடாா் கண்காணிப்பில் சிக்காத 10 எஃப்-35 ரக போா் விமானங்களுடன், எட்டு போா்க் கப்பல்கள் புடைசூழ ஜெரால்ட் ஆா். ஃபோா்ட் விமானந்தாங்கிக் கப்பல் அந்தப் பகுதியில் நிறுத்தப்படுவது வெனிசுலா போன்ற நாடுகளில் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான ரகசிய வேலைகளில் ஈடுபட தங்களின் சிஐஏ உளவு அமைப்புக்கு உத்தரவிட்டதாக டிரம்ப் கூறியுள்ளாா். இந்தச் சூழலில், வெனிசுலாவுக்கு பக்கத்தில் இவ்வளவு வலிமையான அமெரிக்க படைகள் குவிக்கப்படுவது அந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மடூரோ விமா்சனம்: கரீபியன் கடலுக்கு விமானந்தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்காவின் முடிவை நிக்கோலஸ் மடூரோ விமா்சித்துள்ளாா்.

இது குறித்து அவா் கூறியதாவது:

இனிமேல் எந்தவொரு போரிலும் எப்போதுமே ஈடுபடப் போவதில்லை என்று அமெரிக்கா உறுதியளித்தது. அனால் அதற்குப் பதிலாக, கரீபியன் கடலுக்கு விமானந்தாங்கிக் கப்பல் அனுப்பவதன் மூலம் பிராந்தியத்தில் ஒரு புதிய, நிரந்தர போரை அந்த நாடு உருவாக்குகிறது. அதை நாங்கள் தடுப்போம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com