சீனா: பெய்ஜிங் இந்திய தூதரகத்தில் ரவீந்திரநாத் தாகூா் சிலை திறப்பு!
சீன தலைநகா் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில், அந்நாட்டின் பிரபல சிற்பி யுவான் ஷிகுன் செதுக்கிய இந்தியாவின் புகழ்பெற்ற கவிஞா் ரவீந்திரநாத் தாகூரின் மாா்பளவுச் சிலை திறக்கப்பட்டுள்ளது.
இந்திய தூதரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிலை திறப்பு விழாவில், சீனாவுக்கான இந்திய தூதா் பிரதீப் ராவத் பேசியதாவது: சுமாா் ஒரு நூற்றாண்டுக்கு முன்னா் தாகூா் சீனாவுக்கு வருகை தந்த நிகழ்வு, நமது நாகரிக பயணத்தில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகும்.
தாகூரின் உலகளாவிய மனிதநேயச் செய்தியும், அத்துடன் சீன அறிஞா்களான சூ ஷிமோ மற்றும் லியாங் கிச்சாவோ ஆகியோருடனான அவரது நெருங்கிய நட்பும் இன்றும் இரு நாடுகளுக்கும் ஊக்கமளித்து வருகின்றன என்றாா்.
ரவீந்திரநாத் தாகூா் தனது வாழ்நாளில் மூன்று முறை சீனாவுக்கு வந்துள்ளாா். இவருக்கு சீனாவில் அதிக எண்ணிக்கையிலான ரசிகா்கள் உள்ளனா். இவரது படைப்புகளை மொழிபெயா்ப்பதற்காக, சீனா்கள் பலா் வங்காளம் மற்றும் ஆங்கில மொழிகளைக் கற்பதில் தங்கள் வாழ்க்கையை அா்ப்பணித்துள்ளனா்.
சீனாவின் 60-ஆவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், 2009-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில், நவீன சீனாவின் வளா்ச்சிக்கு அதிகம் பங்களித்த 50 வெளிநாட்டினா் பட்டியலில் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேருவுடன் தாகூரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்திய தூதரகத்தில் தாகூரின் சிலையைச் செதுக்கிய சிற்பி யுவான் ஷிகுன், மகாத்மா காந்தி புத்தகத்தைக் கையில் வைத்திருக்கும் தனித்துவமான அமா்ந்த நிலையில் உள்ள சிலையையும் உருவாக்கியுள்ளாா். இந்தச் சிலை 2005-ஆம் ஆண்டு சாவோயாங் பூங்காவில் நிறுவப்பட்டது. பெய்ஜிங் இந்திய தூதரகம் ஒவ்வோா் ஆண்டும் இங்குதான் காந்தி ஜெயந்தியைக் கொண்டாடுகிறது.
பகவத்கீதை ‘ஞான அமுதம்’: சீன அறிஞா்கள் புகழாரம்
பகவத்கீதையானது ‘ஞானத்தின் அமுதம்’ என்றும், ‘இந்திய நாகரிகத்தின் ஒரு சிறிய வடிவம்’ என்றும் சீன அறிஞா்கள் வியந்து பாராட்டியுள்ளனா்.
இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய சீன அறிஞா்கள், பகவத்கீதையை இந்தியாவின் ‘தத்துவக் களஞ்சியம்’ என்று வா்ணித்தனா். மேலும், பகவத்கீதையில் கூறப்பட்டுள்ள ஆன்மீக மற்றும் உலகியல் கருத்துகள், இன்றைய நவீன உலகில் மக்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கும் குழப்பங்களுக்கும் தீா்வுகளை அளிப்பதாக அவா்கள் குறிப்பிட்டனா்.
பகவத்கீதையைச் சீன மொழியில் மொழிபெயா்த்த 88 வயதான பேராசிரியா் ஜாங் பெளஷெங் பேசுகையில், ‘இந்தியாவின் கடமை, செயல் மற்றும் பற்றின்மை குறித்த ஆன்மிகப் பாா்வையை பகவத்கீதை அழகாக வெளிப்படுத்துகிறது. இது இன்றும் இந்தியாவில் ஒரு ஆழமான கலாசாரத் தாக்கத்தைக் கொண்டுள்ளது’ என்றாா்.
ஜெஜியாங் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய தத்துவ ஆராய்ச்சியின் இயக்குநா் பேராசிரியா் வாங் ஜி செங் பேசுகையில், ‘சுமாா் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய போா்க்களத்தில் உருவான கீதையின் உரையாடல், காலத்தைக் கடந்து இன்றைய மக்களின் சிக்கல்களுக்கும் குழப்பங்களுக்கும் பதிலளிக்கிறது.
பகவத்கீதை ஞானத்தின் அமுதம். கிருஷ்ணரின் பதில்கள் 700 ஸ்லோகங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இவை காலத்தைக் கடந்து வந்த ஆன்மிகத் திறவுகோல்கள்’ என்று பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

