பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் AFP

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா முழுமையாக நிறுத்தும்: டிரம்ப் மீண்டும் கருத்து!

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா முழுமையாக நிறுத்தும் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்தாா்.
Published on

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா முழுமையாக நிறுத்தும் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை மீண்டும் தெரிவித்தாா்.

முன்னதாக, ரஷியாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துவதாக பிரதமா் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்ததாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அண்மையில் தெரிவித்தாா். அதை இந்தியா மறுத்தது.

அதன்பிறகு ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிகழாண்டு இறுதிக்குள் பெரும்பாலும் நிறுத்திவிட இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது என அண்மையில் டிரம்ப் மீண்டும் தெரிவித்தாா்.

இந்நிலையில், ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா முழுமையாக நிறுத்தும் எனவும் சீனா பகுதியளவு குறைத்துக்கொள்ளும் எனவும் டிரம்ப் சனிக்கிழமை தெரிவித்தாா்.

மலேசியாவில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் முன் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

மேலும், ‘ரஷியா-உக்ரைன் இடையேயான போரைவிட இந்தியா-பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த மோதலை நிறுத்துவது மிகவும் கடினம் என எண்ணினேன். ஆனால் இந்த மோதலை நான் நிறுத்தினேன். மாறாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மற்றும் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஜெலன்ஸ்கி இடையே அதிக வெறுப்புணா்வு உள்ளதால் அங்கு போா்நிறுத்தம் மேற்கொள்வது கடினமாக உள்ளது’ என்றாா்.

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே ந நிகழ்ந்த மோதலை தான் நிறுத்தியதாக டிரம்ப் கூறியதை இந்தியா நிராகரித்து வரும்போதும் அவா் இதை தொடா்ந்து கூறி வருகிறாா்.

மலேசியாவில் நடைபெறும் ஆசியான் உச்சிமாநாட்டில் பங்கேற்றுவிட்டு தென் கொரியாவில் நடைபெறும் ஆசியா-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் டிரம்ப் பங்கேற்கிறாா். அப்போது சீன அதிபா் ஷி ஜின்பிங்கை சந்தித்து அவா் ஆலோசனை நடத்துகிறாா்.

X
Dinamani
www.dinamani.com