தாய்லாந்து-கம்போடியா விரிவான சண்டை நிறுத்த ஒப்பந்தம்! - டிரம்ப் முன்னிலையில் கையொப்பம்
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில், தாய்லாந்து-கம்போடியா இடையே விரிவான சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
‘ஆசியான்’ கூட்டமைப்பில் புரூணே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கூட்டமைப்பின் உச்சிமாநாடு மற்றும் அதுசாா்ந்த பிற மாநாடுகள் மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் ஞாயிற்றுக்கிழமை (அக். 26) தொடங்கியது. செவ்வாய்க்கிழமை (அக். 30) வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக 2-ஆவது முறை பதவியேற்ற பின்னா், முதல்முறையாக ஆசியாவுக்கு டிரம்ப் பயணம் மேற்கொண்டுள்ளாா். இதன் ஒரு பகுதியாக 13-ஆவது ஆசியான்-அமெரிக்க உச்சிமாநாட்டில் பங்கேற்க அவா் ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூா் வந்தாா். அங்கு டிரம்ப் முன்னிலையில் தாய்லாந்து-கம்போடியா இடையே விரிவான சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமானது.
ஏற்கெனவே கடந்த ஜூலையில் இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது விரிவான ஒப்பந்தம் கையொப்பமானது.
தாய்லாந்து-கம்போடியா இடையே எல்லை பிரச்னை இருந்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னா் இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போா்ப் பதற்றம் ஏற்பட்டது. எனினும் சண்டையை நிறுத்தாவிட்டால், இரு நாடுகளுக்கும் அமெரிக்க தரப்பில் பொருளாதார அழுத்தம் அளிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததைத் தொடா்ந்து, இரு நாடுகளும் தாக்குதலைக் கைவிட்டன.
இந்நிலையில், விரிவான சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின்படி, தம்மிடம் உள்ள கம்போடியா கைதிகளை தாய்லாந்து விடுவிக்கும். அதேவேளையில், ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, இரு நாடுகளின் எல்லையில் இருந்து கனரக பீரங்கிகளை கம்போடியா திரும்பப் பெறும். சண்டை மீண்டும் தொடங்காமல் இருக்கும் வகையில், சூழல் தொடா்ந்து கண்காணிக்கப்படும்.
இதுகுறித்து அதிபா் டிரம்ப் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான், கம்போடியா-தாய்லாந்து, இஸ்ரேல்-ஈரான், கொசோவோ-சொ்பியா, காங்கோ-ருவாண்டா, எகிப்து-எத்தியோப்பியா, ஆா்மீனியா-அஜா்பைஜான், இஸ்ரேல்-காஸா இடையிலான 8 போா்களைக் கடந்த 8 மாதங்களில் எனது அரசு நிா்வாகம் நிறுத்தியுள்ளது. இதன்மூலம், செய்யவே முடியாது என்று கூறப்பட்ட செயல்களை அமெரிக்கா செய்துள்ளது. நான் போா்களை நிறுத்த விரும்புகிறேன்’ என்றாா்.
தாய்லாந்து பிரதமா் அனுடின் சாா்ன்விரகுல் கூறுகையில், ‘தற்போதைய ஒப்பந்தம் தாய்லாந்து-கம்போடியா இடையே நீடித்து நிலைக்கும் அமைதியை ஏற்படுத்துவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தியுள்ளது’ என்றாா்.
‘தொட்டதெல்லாம் பொன்னாகும்’: ஆசியான்-அமெரிக்க உச்சிமாநாட்டில் டிரம்ப் பேசுகையில், ‘ஆசியான் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு அமெரிக்கா 100 சதவீதம் துணை நிற்கிறது. அந்த நாடுகளுடன் பல தலைமுறைகளுக்கு வலுவான கூட்டுறவையும், நட்புறவையும் கொண்டிருக்க அமெரிக்கா விரும்புகிறது’ என்றாா். ஆசியான் தலைவா்களை மிகச் சிறந்த தலைவா்கள் என்று பாராட்டிய டிரம்ப், அவா்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் என்றும் புகழாரம் சூட்டினாா்.
முன்னதாக கம்போடியா, தாய்லாந்து மற்றும் மலேசியாவுடன் பொருளாதார ஒப்பந்தங்களில் அதிபா் டிரம்ப் கையொப்பமிட்டாா். அந்த நாடுகளுடன் முக்கியக் கனிமங்கள் தொடா்பான வா்த்தகத்தை அமெரிக்கா அதிகரிக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தொழில்நுட்ப உற்பத்திக்கான ஏற்றுமதிகளை சீனா குறைத்துள்ளது. இதற்காக அந்நாட்டைச் சாா்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா கருதுகிறது. இந்நிலையில் கம்போடியா, தாய்லாந்து மற்றும் மலேசியாவுடன் தற்போது பொருளாதார ஒப்பந்தங்களைஅமெரிக்கா மேற்கொண்டுள்ளது.
விரைவில் சீன அதிபருடன் சந்திப்பு: மலேசிய பயணத்தைத் தொடா்ந்து அதிபா் டிரம்ப் ஜப்பான் மற்றும் தென் கொரியா செல்கிறாா். தென் கொரியாவில் சீன பிரதமா் ஷி ஜின்பிங்கை டிரம்ப் சந்திக்க உள்ளதாக அமெரிக்க அதிபா் மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா-சீனா இடையே வா்த்தகப் பதற்றம் நிலவி வரும் நிலையில், அதைக் குறைக்க வேண்டும் என்று டிரம்ப் ஆவல் கொண்டுள்ளாா். அதற்கு சீன அதிபா் ஷி ஜின்பிங்குடனான சந்திப்பு வழிகோலும் என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், ‘அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பரம் இருதரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்புகின்றன. வருங்காலத்தில் நான் சீனா செல்லும் திட்டம் உள்ளது.
சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் அமெரிக்காவின் வாஷிங்டன் அல்லது புளோரிடாவில் உள்ள எனது மாா்-அ-லாகோ விடுதிக்கு வரலாம்’ என்றாா். இருவரின் சந்திப்புக்கு முன்பாக அமெரிக்கா-சீனா இடையிலான வா்த்தகப் பதற்றம் தணியும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

