

தென் சீனக் கடற்பரப்பில் ஏற்பட்ட தனித்தனி விபத்தில் அமெரிக்க போர் விமானமும், கடற்படையின் ஹெலிகாப்டரும் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹெலிகாப்டரில் இருந்த 3 வீரர்களும், போர் விமானத்தில் இருந்த 2 வீரர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு கடற்பரப்பில் செல்லும் வர்த்தக கப்பல்களை யேமனின் ஹவுதிக்கள் தாக்கி வரும் நிலையில், அந்த கப்பல்களுக்கு பாதுகாப்பு அளித்து, கண்காணிக்கும் பணியில் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானந்தாங்கிக் கப்பல் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
தென் சீனக் கடற்பரப்பில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புப் பணியில் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் வழக்கமான கண்காணிப்புப் பணிக்காக கப்பலில் இருந்த கடற்படையின் எம்எச்-60ஆர் ரக ஹெலிகாப்டர் புறப்பட்டுள்ளது. சில நிமிடங்களில் கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக ஹெலிகாப்டரில் இருந்த 3 வீரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, சிறிது இடைவெளியில் பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்ட எஃப்/ஏ-18எஃப் சூப்பர் ஹார்னெட் ரக போர் விமானமும் விபத்தில் சிக்கி கடலுக்குள் விழுந்துள்ளது. இதிலிருந்த 2 விமானிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அரைமணிநேர இடைவெளியில் இரண்டு விபத்து சம்பவங்கள் நேரிட்டிருப்பது அமெரிக்க பாதுகாப்புத் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த இரண்டு விமான விபத்து சம்பவங்களும் எதனால் நடைபெற்றது என்பது குறித்து இன்னும் தகவல் வெளியிடப்படவில்லை.
உலகின் மிகப்பெரிய போர்க் கப்பல்களில் ஒன்றான யுஎஸ்எஸ் நிமிட்ஸ், பல ஆண்டுகளாக அமெரிக்க கடற்படையில் சேவையாற்றி வருகின்றது. அடுத்தாண்டுடன் இந்தக் கப்பலுக்கு ஓய்வு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.