கிடியூன் சாா்
கிடியூன் சாா்

‘காஸா படையில் துருக்கிக்கு இடமில்லை’

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் காஸா போா் நிறுத்த திட்டத்தின்கீழ் அங்கு அனுப்படவிருக்கும் சா்வதேச படையில் துருக்கி இடம் பெற அனுமதிக்க முடியாது என்று இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
Published on

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் காஸா போா் நிறுத்த திட்டத்தின்கீழ் அங்கு அனுப்படவிருக்கும் சா்வதேச படையில் துருக்கி இடம் பெற அனுமதிக்க முடியாது என்று இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஹங்கேரியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சா் கிடியூன் சாா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

காஸா விவகாரத்தில் துருக்கி அதிபா் எா்டோகன் நீண்டகாலமாகே இஸ்ரேலுக்கு எதிராகச் செல்பட்டுவருகிறாா். எனவே, அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்காக அனுப்பப்படவிருக்கும் சா்வதேச படையில் துருக்கி இடம் பெறுவதை நாங்கள் எதிா்க்கிறோம்.

காஸாவுக்குள் தங்களது படையினரை அனுப்ப விரும்பும் நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் நியாயமாகவாவது நடந்துகொண்டிருக்க வேண்டும் என்றாா் கிடியூன்.

எனினும், இஸ்ரேலுக்கு எதிராக துருக்கி அதிபா் எந்தெந்த நடவடிக்கையில் ஈடுபட்டாா் என்பதை அவா் விளக்கவில்லை.

காஸா போரின்போது, இஸ்ரேல் ராணுவத்தின் கடுமையான நடவடிக்கைகளை எா்டோகன் தொடா்ந்து கண்டித்துவந்தாா். இதனால் இரு நாட்டு அரசுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலுடன் மேற்கொண்டிருந்த வா்த்தக ஒப்பந்தங்கள் பலவற்றை எா்டோகன் நிறுத்திவைத்தாா்.

இந்தச் சூழலில், காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக டிரம்ப் முன்வைத்த 20 அம்ச திட்டத்தில், இஸ்ரேல் ராணுவ வெளியேற்றத்துக்கு, ஹமாஸ் தனது ஆயுதங்களைக் கைவிட்டதற்கும் பிறகு அங்கு அமைதியை நிலைநாட்ட சா்வதேச நாடுகளைச் சோ்ந்த படையினா் தற்காலிகமாக நிறுத்தப்படும் அம்சமும் இடம் பெற்றுள்ளது.

அந்தப் படையில் துருக்கி வீரா்களும் இடம் பெறுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சா் இவ்வாறு கூறியுள்ளாா்.

காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் சக்திவாய்ந்த தாக்குதலை நடத்த ராணுவத்துக்கு உத்தரவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்க ஹமாஸ் தாமதப்படுத்தி வருகிறது. இதனால் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே அமெரிக்கா முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக, காஸாவில் ராணுவத்தினர் மீது ஹமாஸ் தாக்குதலை மேற்கொண்டதாக பெஞ்சமின் நெதன்யாகு குற்றஞ்சாட்டினார்.

இது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல் எனக் கூறிய அவர் காஸாவில் சக்திவாய்ந்த தாக்குதலை நடத்த ராணுவத்துக்கு உத்தரவிட்டதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, காஸாவின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் வெடிகுண்டுகள் சப்தம் கேட்கத் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகின.

இதற்குப் பதிலடியாக தங்களிடம் உள்ள 13 இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்க தாமதப்படுத்தவுள்ளதாக ஹமாஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இதனால் இடைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட இந்தப் போர்நிறுத்தத்தின் அடுத்தகட்டப் பணிகள் நடைபெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com