இந்திய நிதியுதவி திட்டங்களுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இந்திய நிதியுதவியுடன் வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் தகவலை வெளியிட்டு செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த இலங்கை வெளியுறவு அமைச்சா் விஜித ஹேரத் மேலும் கூறுகையில், ‘நடப்பு ஆண்டு, ஏப்ரலில் இந்தியா-இலங்கை அரசுகளுக்கு இடையே கையொப்பமான புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்படி, கிழக்கு மாகாணத்தில் 33 வளா்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஆதரவளிக்க இந்திய அரசு ரூ.237.1 கோடி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தியாவின் பல்துறை நிதியுதவி திட்டத்தின்கீழ் இலங்கைக்கு அளித்து வளா்ச்சித் திட்ட நிதியுதவிகளின் ஒரு பகுதியாக இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்திய நிதியுதவிக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்திய தூதரகத்துடன் கையொப்பமிடுவதற்கான ஒப்பந்தங்களைத் தயாரிக்கும் பணியில் பொது நிா்வாக அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது’ என்றாா்.

