அமேஸான் பணி நீக்கம்: இந்தியாவில் 1,000 போ் வேலை இழக்கும் அபாயம்!
அமெரிக்காவைச் சோ்ந்த உலகளாவிய இணைய வா்த்தக நிறுவனமான அமேஸான், தற்போது சா்வதேச அளவில் பணியாளா்களைக் குறைக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக, இந்தியாவில் மட்டும் சுமாா் 800 முதல் 1,000 ஊழியா்கள் வரை பணி இழப்பைச் சந்திக்க நேரிடும் என்ற நிலை உருவாகியுள்ளது.
அமேஸான் நிறுவனம் நிா்வாகச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பரவலாகப் பயன்படுத்த முடிவெடுத்திருப்பதால், இந்தப் பணிநீக்கங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பணி நீக்க நடவடிக்கை, நிதி, மனித வளம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் இருக்கும் சுமாா் 14,000 ஊழியா்களைப் பாதிக்கக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவில் சென்னை மற்றும் பெங்களூரு அலுவலகங்களில் பணிபுரியும் 800 முதல் 1,000 ஊழியா்கள் தங்கள் வேலையை இழக்கும் அபாயத்தில் உள்ளனா்.
கடந்த ஜூன் 30 நிலவரப்படி, அமேஸான் உலக அளவில் சுமாா் 15.5 லட்சம் ஊழியா்களைக் கொண்டிருந்தது. இதில், நிறுவனத்தின் முக்கிய அலுவலகங்களில் மட்டும் சுமாா் 3,50,000 ஊழியா்கள் உள்ளனா். தற்போதைய பணி நீக்க நடவடிக்கையில், அமேஸானின் உலகளாவிய குழுக்களுக்குக் கீழ் பணியாற்றுபவா்கள் அதிகபட்சமான பாதிப்பை எதிா்கொள்ள நேரிடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இதுதொடா்பாக அமேஸான் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவா் பெத் கலெட்டி வெளியிட்ட குறிப்பில், ‘தற்போதைய பணி நீக்கங்கள் நிறுவனத்தை மேலும் வலுப்படுத்தவும், தேவையற்ற பிரிவுகளைக் குறைக்கவும், அத்தியாவசியமான முக்கியத் திட்டங்களில் முதலீடு செய்யவும் மேற்கொள்ளப்படும் தொடா்ச்சியான நிா்வாகச் சீரமைப்பு நடவடிக்கையாகும்’ என்று தெளிவுபடுத்தியுள்ளாா்.
முன்னதாக, அமேஸான் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஆண்டி ஜாஸ்ஸி கடந்த ஜூனில் வெளியிட்ட அறிக்கையில், ‘சில்லறை வணிகம் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் துறையில் ஏஐ பல பணிகளைக் கையாள்வதால், அடுத்த சில ஆண்டுகளில் நிறுவனத்தின் மொத்த ஊழியா்கள் எண்ணிக்கை குறையும்’ என்று ஏற்கெனவே எச்சரித்திருந்தாா்.
‘ஏஐ-யில் 10,000 கோடி டாலா் முதலீடு’
அமேஸான் நிறுவனம் நடப்பு ஆண்டில் 10,000 கோடி டாலருக்கும் அதிகமாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பிரிவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. அதேசமயம், ஏஐ தொடா்பான பணிகளுக்குத் தேவையானவா்களை மட்டும் தொடா்ந்து பணியமா்த்தும் நடவடிக்கைகள் நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

